முத்தமிழ் வித்தகர் விபுலானந்த
அடிகளார்
காலங்காலமாய் விரைகின்ற
பொழுதுகளிலே சில அற்புதமான அவதாரங்கள் தோன்றித் துளங்கி மறைந்து போகின்றனர். ஆனால், காலம்காலமாய் அவர் ஆற்றிய சேவைகள் அவர்களை இறவாப்பேறுபெற்ற
பெரியார்களாக உலக அரங்கிலே வாழ வைக்கின்றன. மகத்தான மக்கட் பிறப்பிலே இறைவனால், பார்த்துப் பார்த்து நுண்ணறிவை ஊட்டிப் படைக்கப்பட்ட
படைப்புக்களே கிழக்கின் ஜோதி விபுலானந்த அடிகளார் போன்ற துறவிகள்.
இக்கட்டுரையை வடிப்பதற்காக நான்
அவர் பக்கங்களைப் புரட்டியபோது கண்ணீர்த்துளிகள் கன்னங்களை நனைத்தன. அறிவுப்பசி மட்டுமன்றி
அநாதைகளுக்கு அடைக்கலம் கொடுத்து, சாதிமத பேதமின்றி
ஆசிரியராக, பண்டிதராக, விஞ்ஞானப் பட்டதாரியாக, பாடசாலைகளின் முகாமையாளராக, பல்கலைக்கழகங்களின் தமிழ்த்துறைப்பேராசிரியராக, அறிஞராக, ஆராய்ச்சியாளராக, மொழிபெயர்ப்பாளராக, சமூகத்துறவியாக, சமூகச்சீர்திருத்தவாதியாக, சமயம், மொழி, கல்வி, கலை என ஐம்பது ஆண்டுகளுக்குள்ளேயே
பல பக்க சாதனைகள் புரிந்து வாழ்ந்து உலகவாழ்க்கை
துறந்த அடிகளார் அவர்களின் வாழ்க்கையும், அதற்கான சந்தர்ப்பங்கள்
அவருக்குக் கிடைத்தமையும், அவற்றைச் சரியான
முறையில் பயன்படுத்திக் கொண்டமையும், கற்றதைக் கொண்டு
தன்னை விளங்கச் செய்தமையும், காலம்காலமாய் அழியாப்
புகழை தேடிக் கொண்டமையும் ஆச்சரியத்தில் ஆற்றும் விடயங்களாகக் காணப்படுகின்றன. கற்பனை
பண்ணிப் பார்க்கமுடியாத அளவிற்கு பிரமாண்டமாக என் மனக்கண்ணில் தோன்றுகின்றார்.
அடிகளார் அவர்களுக்குத் தம்பிப்பிள்ளை
என்னும் நாமத்தையே பெற்றோர் சூட்டினர். இளமையில் நோய்வாய்ப்பட்டதனால் கதிர்காமம் கொண்டு
சென்று அவருக்கு மயில்வாகனன் என்னும் நாமம் சூட்டப்பட்டது. எப்பொழுதும் சாந்தமாகவே
காணப்படும் இவரை, மயில்குஞ்சு என்று
இளமையிலே அனைவரும் அன்புடன் அழைப்பார்கள். 1922 ல் சென்னை மயிலாப்பூரில் அமைந்திருந்த இராமகிருஷ்ண
மடத்தில் சேர்ந்து பிரபோதசைதன்யர் என்னும் பிரமச்சரிய ஆச்சிரமப்பெயர் சூட்டப்பட்டார். 1924 ஆம் ஆண்டு பௌர்ணமி
சித்திரை தீட்சையின் பின்பே விபுலானந்த அடிகளார் என்னும் நாமம் சூட்டப்பட்டது. விபுலம்
என்றால், அறிவு. ஆனந்தம்
என்றால், மகிழ்விப்பவர்.
அறிவினால் உலகை மகிழ்விப்பவர் என்னும் அதி அற்புதமான கருத்தமைந்த பொருத்தமான பெயர்
இவருக்கு சூட்டப்பட்டது. இவர் குணம் நாடி, குறிப்பிட்ட நாமங்கள்
அவரை வந்தமைந்தமைந்தாலும் விபுலானந்த அடிகளார் என்னும் நாமமே உலகலாவிய ரீதியில் நின்று
நிலைக்கின்றது.
ஒருமுறைதான் படிப்பார் உள்ளத்தில்
பதித்துவிடுவார். இவர் அறிவுத் திறமை மேலும் வெளிப்பட இவரின் தந்தையார் சாமித்தம்பி
அவர்கள் வீட்டிலும் தமிழ் இலக்கண இலக்கியங்களைக் கற்பிப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தார்.
பெரியபுராணவசனம், பஞ்சதந்திரம், வினோதரசமஞ்சரி, வில்லிபாரதம், நைடதம், கந்தபுராணம், காசிகாண்டம்,
முதலிய
நூல்கள் ஒன்றன்பின் ஒன்றாகத் தந்தையாரால் தரப்பட்டது. நுனிப்புல் மேய்வது போலன்றி ஒவ்வொன்றையும்
முழுவதுமாகக் கற்றாலன்றி மற்றைய நூல் தரப்படமாட்டாது. துறைபோக ஒன்று கற்றதன் பின்பே
மற்றைய நூல் தரப்படும் என்னும் தந்தையாரின் கட்டளையின் படியே தான் கற்றதாக அடிகளார்
கூறியுள்ளார். பொறுப்பான தந்தை அமையப்பெற்றதும் அடிகளாருக்கு ஆரோக்கியமாகவே பட்டது.
இவர் வடமொழி, இலத்தின்,
கிரேக்கம், பாளி, சிங்களம், ஆங்கிலம்,
வங்காளம், அரபு ஆகிய மொழிகளில் கொண்ட ஆழ்ந்த அறிவே ஏனைய இலக்கியங்களுடன்
தமிழ்மொழியை ஒப்பிட்டுத் தமிழின் இன்பம் நுகரக்கூடியதாக இருந்ததுடன் இயல், இசை, நாடகம் என்னும்
முத்தமிழையும் ஒன்றாகவே ஆய்வுசெய்த முதல் வித்தகராகவும் திகழக்கூடியதாகவும் இருந்தது.
கிரேக்க இலக்கியங்களை
ஒப்பிட்டு சிறப்பான நூல்கள் எழுதியுள்ளார். மதங்கசூளாமணி என்னும் நூல் தமிழ் நாடகம்
பற்றிய ஆய்வுப் பெட்டகமாகத் திகழ்கின்றது. தரங்கயனாரின் தசரூபத என்னும் வடமொழி நாடகத்தைத்
தமிழில் மொழிபெயர்த்து வடமொழி நாடகம் எப்படி இருக்கவேண்டுமென்று அதிலுள்ள எடுத்துக்காட்டியல் என்னும் பகுதியில்
விளக்கியுள்ளார். செக்ஸ்பியர் நாடகங்களுடன் ஒப்பிட்டு மேற்கு நாட்டு நாடகங்களில் நாடக
உறுப்புக்கள் எப்படி அமைந்திருக்கின்றன என்பதை விளக்குகின்றார். இவ்வாறு செக்ஸ்பியர்
நாடகங்களுடன் ஒப்பிட்டு தமிழ் நாடகங்களுடன் ஆய்வு செய்ய இவருக்கு ஆங்கில அறிவு மேம்பட்டுக்
காணப்பட்டது. இவ்வாறு ஆங்கில அறிவு மேம்பட மட்டக்களப்பு புனித மைக்கேல் கல்லூரி என்னும்
ஆங்கிலப் பாடசாலை மெதடிஸ்த மிஷனரிமாரும் கத்தோலிக்கக் குருமாரும் அடியெடுத்துக் கொடுத்தனர்.
காலைப்பொழுது பாடசாலைப் பாடங்கள், மாலைப்பொழுது பாரதவசனங்கள்
கற்பது என பழகிய பழக்கமானது பின்னாளில் தமிழும் ஆங்கிலமும் ஒன்றாகக் கற்க இலகுவாக இருந்தது.
அதேபோல் கணிதத்தை இவர் புனித மைக்கேல் கல்லூரியில் கல்வி கற்ற காலத்தில் இருந்த பிரெஞ்சு
அதிபர் வண.பொனல் என்பவரிடம் கற்றார். இது இவரது கணிதத்திறமைக்கு அடிகோலாக அமைந்ததுடன்
யாழ்நூல் ஆராய்ச்சிக்குக் கணிதத் திறமையும் காரணமாக அமைந்தது.
இசைமேல் ஆர்வம் தோன்ற மட்டக்களப்பு
வாவியிலே பூரணநிலவு பொங்கிப் பூரிக்கும் பொழுதினிலே அங்கு பொங்கி எழும் நீரரமகளிர்
காந்தர்வ இசையில் களிப்புற ஆழக்கடல் நோக்கி வாவியிலே பயணம் செய்வார். அவ்விசை கேட்டு
மகிழ்ந்தின்புறுவார். ஆண்டுதோறும் ஆனித்திங்களிலே மட்டக்களப்பு மாநிலமெங்கும் காணப்படும்
கண்ணகி அம்மன் ஆலயங்களில் பாடப்படும் பாடல்களும் சிலப்பதிகார பாடல்களின் சிலம்பொலிகளும்
விபுலானந்த அடிகளாரின் இசை ஆராய்ச்சிக்கு அடிமனது ஆரம்பக் காரணமாக இருந்திருக்க வேண்டும். விஞ்ஞானத்தையும் தமிழையும் ஒன்றாகக் காணும் திறமை
அடிகளார்க்கு இருந்ததனால், கணிதம், பௌதிக விஞ்ஞானம், தமிழ் இசை அறிவு கலந்து இவர் யாத்து, 1947ல் கரந்தைத் தமிழ்ச்சங்கத்தில் வெளியீடு செய்யப்பட்ட
யாழ்நூல் அரங்கேறக் காரணம் பற்றி அவரே ஓரிடத்தில் குறிப்பிடுகின்றார்.
``எந்த நூலை வாசித்தாலும் தேனாகத் தித்திக்கவில்லை சிலப்பதிகாரமே
தேனாகத் தித்தித்தது‘‘
எனத் தன் வாயாலேயே
எடுத்துரைத்திருக்கின்றார். சிலப்பதிகாரத்தின் அரங்கேற்றுக் காதையை ஆராய்ந்தார். சிலப்பதிகாரத்தின்
உரையில்லாத பகுதிகளுக்கு உரைதேடப் புகுந்த ஆராய்ச்சியின் பயனும், மாதவியும் கோவலனும் கடற்கரையிலே இருந்து மாறிமாறி
மீட்டிய யாழ் இசையும் இவர் கருத்தைக் கவர்ந்தது. இவ் யாழை யாம் ஏன் மீண்டும் பெற முடியாது
என்று சிந்தித்தார். வங்கக்கடலன்னை கொண்டு சென்ற முளரியாழ், சுருதிவீணை,
பாரிசாத
வீணை, சதுர்தண்டிவீணை, போன்றவற்றை அடிகளார் பழந்தமிழ் நூல்களில் கற்றவற்றைக்
கொண்டு மீண்டும் 23 ஆண்டுகள் உழைத்து
உலகிற்கு செய்தளித்தமை கண்டு இசைத்தமிழ் அன்னை ஆச்சரியத்தில் அகலக்கண்விரித்தாள்.
யாழ் கருவியை பெண்ணின் 7 வகைப் பருவத்துடன் ஒப்பிட்டு அடிகளார் வர்ணித்திருக்கும்
பாங்கு இன்புறத்தக்கது. ``சரித்திரகால எல்லைக்கெட்டாத
காலத்திலே வில்யாழெனக் குழவியாயுதித்து மழலைச்சொற்பேசி சீறியாழ் என்னும் பேதைப் பருவமெய்தி, பாணனொடும் பாடினியொடும் நாடெங்கும் திரிந்து ஏழைகளும்
இதயம் களிப்பெய்த இன்சொல் கூறிப் பின் பேரியாழ் என்னும் பெயரோடு பெதும்பைப் பருவமெய்திப்
பெரும் பாணரோடு சென்று குறுநில மன்னரும், முடிமன்னரும், தமிழ்ப்புலவரும், கொடைவள்ளல்களும்
கேட்டு வியப்பெய்தும் வண்ணம் நயம்பட உரைபகர்ந்து அதன்பின் மங்கைப்பருவமெய்தி அப்பருவத்திற்கேற்ப
புதிய ஆடையும் அணிகலன்களும் பூண்டு நாடக அரங்கத்திலே திறமை காட்டி மடந்தைப் பருவம்
வந்தெய்தலும், திருநீலகண்ட பெரும்பாணரோடும், மதங்கசூளாமணியாரோடும் அம்மையப்பர் உறைகின்ற திருக்கோயில்கள்
பலவற்றை வலம் வந்து தெய்வ இசையினாலே அன்பருள்ளத்தினை உருக்கி, முத்தமிழ் வித்தகராற் பாராட்டப்பட்டு அரிவைப் பருவம்
வந்து எய்துதலும் அரசிளங்குமரிகளுக்கு இன்னுயிர்ப்
பாங்காகி அவர்க்கேற்ற தலைவரை அவர்பாற் சேர்த்துச் சீரும் சிறப்பும் எய்தி இன்று யாழ்
என்னும் மொழி நங்கை இருந்த இடம் தெரியாமல் மறைந்து போயினாள்‘‘ என்று எடுத்துரைத்தார். மீண்டும் உயிர் பெற வைத்தார்.
அடிகளாரின் சமூகசேவைக்கு வாலிபப் பருவத்தில்
அவர் பயின்ற படைப்பயிற்சி உரமெடுத்துக் கொடுத்தது. ஐரோப்பிய மகாயுத்த காலத்திலே தரைப்படையில்
சேர்ந்து குதிரையேற்றம், துப்பாக்கிப் பிரயோகம், முதலிய படைப்பயிற்சிகள் பெற்றார். கடற்கரையில் காவல்
இருந்து எதிரிகளை நாட்டுக்குள் புகவிடாமல் காத்தார். சமூகத்தொண்டு தீண்டாமை ஒழிப்பு, சமயத்தொண்டு இவை எல்லாம் இவரை ஒரு வீரத் துறவியாகவே
காட்டுகிறன.
யோக சுவாமிகளின் தொடர்பே இவருக்கு
ஆன்மீக வளர்ச்சிக்குத் துணையாகத் திகழ்ந்தது.
பாரதிமேல் கொண்ட தீராத நாட்டம், தமிழை நவீனப்படுத்தும் பண்பு, ஒப்பியல் கல்வி இவையே பாரதியை உலகுக்கு வெளிப்படுத்த
உதவியாக இருந்தன. பாரதியைப் பித்தன் என்றும்,
கஞ்சாக்கவி
என்றும் அவர் பாடல்கள் வீண் உரைநடையென்றும் தூற்றிய தமிழறிஞர்களை கற்றறிந்தார் ஏற்றுவது கலித்தொகை மட்டுமன்று கண்ணன்
பாட்டுமே என்று கூறிப் புரியவைத்தவர். பாரதி பெருமையை உலகுக்குணர்த்த முதற்காரணம் அடிகளார்
என்றால், அது மிகையில்லை.
இது மறைக்கப்பட்ட உண்மையுமாகின்றது.
அடிகளார் தமிழிசை சம்பந்தமாக நிகழ்த்திய சொற்பொழிவுகளும், ஆராய்ச்சிக் கட்டுரைகளும் இப்பொழுது நூல்களாக வெளிவந்துள்ளன.
எதையும் ஆழ்ந்து நோக்கும் அவர் சிறப்பை நடராசவடிவம் என்னும் நூல் விளக்குகின்றது. ஆரியமும்
தமிழும் வல்ல பண்டிதமணியாருக்கு ஆங்கிலமொழிக் கவிநயத்தை எடுத்துக்காட்டக் கருதி எழுதப்பட்ட
பாட்டுடை உரைத்தொடரே ஆங்கிலவாணி என்னும் கட்டுரையாகும். அடிகளாரின் கற்பனை வளத்தினையும், கவித்துவத்தினையும் அவரால் எழுதப்பட்ட தனிப்பாடல்கள், தில்லைமாநகர் திருவமர்மார்பன் திருக்கோயிற்காட்சி, கங்கையில் விடுத்த
ஓலை, நீரரமகளிர் இன்னிசைப்பாடல், மொழிபெயர்ப்புப் பாடல்கள் போன்றன மெய்ப்பிக்கின்றன.
இத்தனை அறிவுஞானம் பெற்ற அடிகளாரின் நினைவுநாளை
இலங்கைஅரசு அகில இலங்கை அகில இலங்கை தமிழ்மொழி தினமாக பிரகடனப்படுத்தி கௌரவித்தது என்பது
ஆச்சரியப்படும் விடயமல்ல.
முற்றுமுழுதான அறிவுத் திறனும், அயராத உழைப்பும் தமிழ், இலக்கியம்,
சமயம், கலை, சமூக நாட்டுப்பணிகளும்
இவருள்ளத்தில் ஊற்றாய் ஊறிக்கொண்டிருந்தமையே இறவாப்புகழ் பெற்று என்றும் உலகமெலாம்
போற்றப்படும் உத்தம துறவியாக, வித்தகராக, அடிகளார் திகழ்வதற்கு காரணமாகின்றன. கலியுக அகத்தியர், புதுமைக்கபிலன், குருபரம்பரையின்
குலவிளக்கு, வீரத்துறவி இவ்வாறாக
அறிஞர்களால் போற்றப்படும் அடிகளார் பிறந்த மண்ணில் நானும் பிறந்தேன் என்னும் போது எனக்குள்ளும்
மகிழ்ச்சி பொங்கிப் பிரவாகிக்கின்றது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.