• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    வியாழன், 14 செப்டம்பர், 2017

    பழகிப்பார் பிடிக்கவில்லையா இருக்கிறது இன்னும் ஒன்று

       


    “காலடிக்கும் கன்னாக்காரி நானிருக்கன் dont worry . உனக்கெதுக்கு அச்சம் அச்சம். ஆசைக்கள allow பண்ணு. அச்சங்கள deleat பண்ணு. போய் வரலாம் உச்சம் உச்சம்.

    “இன்னும் கொஞ்சம் சத்தமாப் போடு, இன்னும் கொஞ்சம் சத்தமாப் போடு. என்ன இது கொஞ்சமும் உசார் இல்லாம இருக்கு”

    சகுந்தலா வாகனத்துள் இருந்தவளாய். முன் இருக்கையில் அமர்ந்து இருக்கும் மகளிடம் பாட்டை சத்தமாய்ப் போடும்படி கரைச்சல் கொடுத்துக் கொண்டிருந்தாள்.

    “பொறுங்க அம்மா. உங்கள் உசாருக்கெல்லாம் பாட்டுப் போட முடியாது. நவியிட சத்தமும் கேட்குதில்ல. எங்க கொண்டு எங்கள கொல்லப் போறீங்களோ தெரியாது”
    மகள் வசந்தி தனது காதலன் சபேஷின் அருகில் இருந்தபடி தாயை அதட்டினாள்.

    “பேசாம இரும் சகு. சத்தம் கூட்டினால் நவிகேசன் சத்தம் சரியாக் கேட்காது” ருத்ராவின் வார்த்தைகளைக் கேட்டு

    “இல்ல ருத்ரா. பாட்டு உசாரா இருந்தாத்தான் பிரயாண களைப்புத் தெரியாது”

    “ஏன் நான் பக்கத்தில் இல்லையா? ருத்ரா சகுந்தலாவைக் கட்டி அணைத்தான்.

    முன் இருக்கையில் மகள் வசந்தியும் அவள் காதலன் சபேஷும் இருக்க, பின் இருக்கையில் சகுந்தலாவும் அவள் காதலன் ருத்ராவும் இருந்தபடி வாகனத்தில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.

    “வீட்டில் அப்பா என்ன செய்றாரோ தெரியாது. ஒருக்கா டெலிபோன் எடுத்துப் பாருங்கோ அம்மா”

    “சும்மா இருக்க மாட்டா...... தொடங்கிட்டியா...... கொஞ்சம் நிம்மதியா இருக்கலாம் என்றுதான் வந்தனான். திரும்பவும் அந்த மனிசன நினைவுபடுத்திறாய். அவர் ஒன்றும் செத்துக் கித்துப் போக மாட்டார். அந்த ஹார்ட் பேசன்ட்டோட என்ன கிடந்தது சாகச் சொல்லாத”

    “ஏன் அம்மா உங்களுக்குக் ஹார்ட் இல்லையா? உங்களுக்கு வருத்தம் வராதா?

    “இப்ப என்ன செய்யச் சொல்றாய். எனக்கும் வர வேணும் என்று விரும்புறியா? அந்த வருத்தக்காரனோட வீட்டிலேயே கிடக்க வேண்டும் என்றியா? ஆத்திரத்தில் கத்தினாள் சகுந்தலா.

    cool.... cool சகுந்தலா” என்றபடி அவளைச் சாந்தப் படுத்தினான் ருத்ரா.

    பேரின்பம் அன்பாகவும் சிறப்பாகவும் மனைவி மகளுடன் வாழ்ந்தவர் தான். காலம் மனிதர் வாழ்வில் தானாகவே சேற்றை அள்ளிப் பூச நோயைக் கொண்டு வந்து சேர்த்துவிடும். நோய் வந்து விட்டால் வலி சினத்தைத் தருவதுதானே இயற்கை. பொறுத்து வாழக் கட்டிய தாலி அச்சப்படுத்திய காலம் கடந்துவிட்டது. வாழும் போது கட்டிய கணவனிடம் பெற்ற சுகம் அனைத்தும், அவன் துன்பப்படும் காலத்தில் மறந்து விடுவதுதான் இக்காலத்தின் நிகழ்வு என்பதாயிற்று. அவனைத் தூக்கி நிமிர்த்த மனம் ஒப்பவில்லையானாலும் வேறு ஒருவனை அணைக்க எப்படி மனம் வருகின்றதோ புரியவில்லை. ஆனால், சகுந்தலாக்கு அந்த மனம் இருக்கிறது.

    வீட்டை விட்டு வெளியே போவதுதான் அவளுக்கு பாரிய இன்பம் அதுவும் ருத்ராவுடன் போவது என்றால் கொள்ளைப் பிரியம். சந்தி சிரிப்பது பற்றிய அச்சம் அவளுக்கு இல்லை. இருந்திருந்தால், தனது மகளை இப்படி வளர்த்திருப்பாளா?

    எப்படி என்று கேட்கின்றீர்களா?

    வசந்தி, சகுந்தலா பேரின்பம் பெற்றெடுத்த ஒரே பெண்பிள்ளை. கல்வி என்பது கொஞ்சம் முயற்சி எடுத்தால், பெற்றுக் கொள்வதற்கு ஐரோப்பிய நாடு வேண்டிய உதவிகளை வழங்கும். அதனால் வசந்தி நன்றாகப் படித்தாள். நல்ல தொழிலும் பெற்றாள். சமுதாயக் கட்டுப்பாடுகள், ஒழுக்க நெறிகள் அவளுக்கு புரியாத புதிர். வாழ்க்கை என்பது ஒருமுறைதான் அதை வாழ்ந்து முடிக்க எப்படியும் வாழலாம் என்னும் இலட்சியத்தை உடையவள். ஆனால், தந்தையில் பாசம் அதிகம் இருந்தாலும் தாயின் போக்கில் பிடிப்பு பற்றிக்கொண்டதற்கு காரணம் கேட்க முடியாது. பிள்ளையைத் தாய் சரியான முறையில் வளர்த்தெடுப்பாள் என்பதில் அதிக நம்பிக்கை கொண்டவர்தான் பேரின்பம். அதனால், அவர்கள் இருவரும் பேரின்பத்திற்குச் செய்தது நம்பிக்கைத் துரோகம். அவருக்கு மட்டுமா!

    “வசந்தி! உனக்கு கணவன் வேணுமென்றால், நான் சொல்வதைக் கேள். உணர ஆட்டத்திற்கு எல்லாம் ஆடவேண்டும் என்றால், இலங்கையில் இருந்து ஒருவனை இங்கே எடு. பழகிப் பார். அந்த நேரமே வேறு ஒருவனைத் தேடிப்பிடி. அவனோட பழகிப்பார். எது ஒத்து வருதோ அவனை கல்யாணம் செய். I mean இலங்கையில் இருந்து கூப்பிட்டவனை விட்டுப் போட்டு மற்றவனைக் கல்யாணம் செய். இது ஒன்றும் தவறில்ல. பிடித்தவனைத் தானே கல்யாணம் செய்ய வேணும். கல்யாணம் ஆயிரம் காலத்துப் பயிர் என்று சொல்லியிருக்கின்றார்கள்” இவ்வாறே சகுந்தலா மகளுக்கு புத்தி சொல்லி வளர்த்தாள்.

    தாய் சொல்லே மந்திரம் என்று நினைத்த வசந்தியும் ராம் ஐ இலங்கையில் இருந்து ஜேர்மனிக்கு இறக்குமதி செய்தாள். வந்தவனோ காதலி மனம் நிறையக் காதல் சுமந்தவள் என தப்புக் கணக்குப் போட்டான். அன்பாகத்தான் பழகினாள். அளவுக்கதிகமாகக் காதலைக் கொட்டினாள். மதி மயங்கி கண்கெட்ட காதலுக்கு ராமும் அடிமையாக்கினான். தன் உடலெங்கும் அவள் பெயரைப் பச்சை குத்தினான். அவள் இன்றி ஒரு மணிப் பொழுதைக் கூட அவனால் தாண்ட முடியவில்லை. ஆனால், வசந்தியோ ....

    “இங்க பாருங்க ராம். உங்களை நான் இங்கே கூப்பிட்டு எடுத்தது உங்களுக்கு நல்லதாப் போயிட்டுது. சும்மா உங்களால் இலங்கையில் இருந்து ஜேர்மனிக்கு வரமுடியாது. அந்த உதவியை நான் தான் உங்களுக்குத் தந்திருக்கிறேன். நீங்கள் இங்கே வேலை செய்யக் கூடிய அனைத்து வசதிகளும் இருக்கிறது. எனக்கு ராம்...... உங்களை விட வேறு ஒரு பெடியனில் ஆசை ஏற்பட்டு விட்டது. அவன் இங்கே பிறந்துள்ளான். எனக்கு அவன் கூட வசதியாகத் தெரிகின்றான். அவனோடப் பழகிப் பார்க்கிறான். பிடிக்கவில்லை என்றால் உங்களைத் திருமணம் செய்கிறேன். ok  தானே.

    “வாழ்க்கையை எப்படி இலகுவாக எடுக்கிறாய். நான் இங்கை வருவதற்காகவா உன்னோடு பழகினேன். நான் உன்னை என் உயிராக அல்லவா நினைத்தேன்”

    Stupid.... சேர்ந்து வாழ மனம் ஒத்துப் போக வேணும். எனக்கு உன்ன விட best தேவை”

    இப்படிக் கூறித் தான் வசந்தி, ராமை பிரிந்தாள்               

    வசந்தியை மறக்க முடியாத வேதனை அவன் வாழ்க்கையை வெறுக்கச் செய்தது. சகுந்தலாவிடம் சொல்லி, வசந்தி மனதை மாற்றலாம் என்று கருதிய ராம், அவள் தாய் சகுந்தலாவிடம் முறையிட்டான்.

    “ராம். இந்தக் காலத்துப் பிள்ளைகள் இப்படித்தான் தம்பி. வெள்ளைக்காரப் பிள்ளைகளப் பார் குறைந்தது ஒரு 30 பெடியங்களோட பழகித்தான், பிறகு ஒருவனைக் கல்யாணம் செய்வார்கள். நீர் வேண்டுமென்றால் வேற பெட்டைய பிடியும். ஆனால், கல்யாணம் கட்டிப் போடாதையும். வசந்தி இப்ப புதுப்பெடியனப் பிடித்திருக்கிறாள். உமக்குத் தெரியும்தானே. அவன் அவளுக்கு ஒத்து வரவில்லை என்றால், உம்மோடதான் வாழ்வாள் தம்பி”

    “நல்ல தீர்ப்பு சொல்லியிருக்கிறீங்கள். கல்யாணம் என்பதும், காதல் என்பதும் உங்களுக்கு வியாபாரமாய் போய்விட்டது. நல்ல அம்மாவும், நல்ல மகளும்”

    என்றபடி ஏக்கம் கொண்ட மனதுடன் நம்பிக்கை துரோகத்தையும் சுயநலத்தையும்  எண்ணி கலங்கினான் ராம்.


    வீட்டில் தாலி கட்டிய கணவன் தனித்திருக்கத் தன் காதலன் ருத்ராவுடன் தாய் சகுந்தலாவும், இலங்கையில் இருந்து திருமணம் செய்வதற்காக அழைத்தெடுத்த ராமைத் தவிக்க விட்டுத் தன் காதலனுடன் வசந்தியும் உல்லாசப் பிரயாணம் மேற்கொண்டு டென்மார்க் நோக்கிப் பயணம் செய்தார்கள்.



    கருத்துகள் இல்லை:

    கருத்துரையிடுக

    வாருங்கள்! உங்கள் எண்ணங்களைப் பகிர்ந்து உதவுங்கள்.

    உள்ளத்தின் குரல் - பிரேம் ராவத்

      உள்ளத்தின் குரல் ஆசிரியர்:   பிரேம் ராவத் வெளியீடு: 2024 12 அத்தியாயங்களில் 357 பக்கங்கள்   இரைச்சல் மிகுந்த உலகத்தில் நிம்மதியை...