எழுத்துகளுக்கும்
ஆடை கட்ட வேண்டும்
இலக்கியம் என்பது ஒரு சமூகம்
வாழுகின்ற காலத்தைத் தெட்டத் தெளிவாக வேறு சமூகத்துக்கு, அடுத்த கால கட்டத்துக்குப் படம்பிடித்துக்
காட்டச் சிறந்த கண்ணாடி. அதனாலேயே காலத்தின் கண்ணாடி இலக்கியம் என்பார்கள். சங்கம்
தொட்டு இன்று வரை தமிழ் இலக்கியங்களே எமது பண்பாட்டு விழுமியங்களை உலகத்துக்கு
எடுத்துக்காட்டியது. எனவே இலக்கியம் சத்தியமாக இருப்பதுடன் சுத்தமாகவும் இருக்க
வேண்டியது அவசியமாகின்றது. ஆனால், தற்காலத் தமிழ் இலக்கியங்கள் எதிர்காலத் தலைமுறையினருக்கு என்ன பண்பாட்டைப்
போதிக்கப் போகின்றது என்பது கேள்விக்குறியாக அமைகின்றது. இலக்கியங்களைக் கற்பதில்
அச்சமும் வெட்கமும் ஏற்படுகின்றது.
இக்கட்டுரை இரண்டு அம்சங்களை
ஆராய்கின்றது. ஒன்று நூல்களிலுள்ள அச்சுப் பிழைகளும், கருத்துப் பிழைகளும், இரண்டாவது ஆபாச எழுத்துக்கள்.
‘நீரளவே ஆகுமாம் நீராம்பல் தான் கற்ற
நூலளவே ஆகுமாம் நுண்ணறிவு’’
என்று நாம் கற்கின்ற நூல்களின் அளவே
எம்முடைய அறிவு அமைகின்றது என்கிறார் ஒளவையார்
‘தொட்டனைத் தூறும் மணற்கேணி
மாந்தர்க்குக்
கற்றனைத் தூறும் அறிவு’’
என்று படிக்கப் படிக்க அறிவு வளரும்
என்கிறார் வள்ளுவப் பெருந்தகை. எனவே படிப்பு என்பது பாடசாலைக் கல்வியில்
மாத்திரமன்று நாம் வாசிக்கின்ற நூல்களின் மூலமும் பல விடயங்களைக் கற்றுக்
கொள்ளுகின்றோம். வாசிப்பினால், அறிவு பெற்ற பல அறிஞர்களை நாம்
அறிவோம். நெருப்பு வெளிச்சத்தில் படித்த ஆபிரகாம் லிங்கன், இறக்கும் தறுவாயிலும் நூல்களைப் படித்த பகத்சிங், சோக்ரட்டீஸ்,
கருணாநிதி, பாரதிதாசன் போன்றவர்கள் வாசிப்பின் மகத்துவத்தை
உலகத்துக்கு உணர்த்தியிருக்கின்றாரகள்.
நாம் என்ன கற்கின்றோமோ அதுவாகவே
மாறுகின்றோம். மனத்தைச் செம்மைப்படுத்தும் நூல்களைக் கற்கின்ற போது எமது
சமுதாயத்துக்கு நல் வழிமுறைகளைக் காட்டுவோம் அதனாலேயே நல்வழி, நன்னெறி போன்ற நூல்களை இளம் பிராயத்திலேயே
மாணவர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றது. நல்ல நண்பனாக, நல் ஆசானாக,
நல்ல
ஆன்மீக குருவாக, நல்ல மனிதனை உருவாக்க வாசிப்பு
உதவியிருக்கின்றது. ஆனால், இன்று இக்கருத்துக்கள் உண்மையானவையா? என்னும் ஐயம் ஏற்படுகின்ற வகையிலே கருத்துப்
பிழைகள் அமைந்துவிடுகின்றன. இன்று பத்திரிகைகளில் பிரசுரமாகின்ற பல சிறுகதைகளில்
சிறுகதைக்குரிய செப்பம் இல்லை. அவை அழுக்குகளோடு பிறந்த சிசுக்களாகவுள்ளன.
பத்திரிகைகளும், சஞ்சிகைகளும் கூட அவற்றினைச்
செப்பனிடுவதில் அக்கறை கொள்வதில்லை என செங்கை ஆழியான் அவர்கள் ஞானம் ஆசிரியர்
தி.ஞானசேகரன் அவர்களின் நேர்காணலில் குற்றஞ்சாட்டுகின்றார்.
இதற்கு எடுத்துக்காட்டாகத்
தமிழ்நாட்டுப் பெண் சாதனையாளர்கள் பன்னாட்டுக் கருத்தரங்கு என்னும் நூலிலே அரசு
கல்வியியல் கல்லூரி உதவிப் பேராசிரியர் ஒருவர் ‘மங்கையராய்ப் பிறப்பதற்கே நல்ல
மாதவம் செய்திடல் வேண்டுமம்மா’’ என்னும் கவிமணி தேசிகவிநாயகம்பிள்ளை அவர்களின்
வரிகளை ஒளவையாரின் வரிகள் என்று எழுதியுள்ளார். தமிழ் பல்கலைக்கழக நூலகர் தனது
கட்டுரையில் இந்த வரிகளையே பாரதியார் பாடியதாக எழுதியுள்ளார். ஒரே நூலில் இவ்வாறான
தவறுகள் வந்திருக்கின்ற போது அந்த நூலுக்கு அணிந்துரை எழுதிய மிகுந்த கல்வியாளரே
அதனைக் கண்டு கொள்ளவில்லை. சிலப்பதிகாரப் பாடல் என்று சிலப்பதிகாரத்திலேயே இல்லாத
ஒரு பாடல் கொரொனா காலத்திலே இணையத்தில் உலாவின. இவ்வாறான தவறுகளை வாசிக்கின்ற
வாசகர்கள், மாணவர்கள், பேச்சாளர்களும் தப்புத் தப்பாக உலகத்துக்குச்
செய்திகளைச் சொல்பவர்களாக இருப்பார்கள். இணையத்திலேயே தவறுகள் ஏற்படுகின்றன
என்பதைத் தாண்டி அச்சு நூல்களிலும் தவறுகள் காணப்படுகின்றன.
சங்கப்புலவர் சீத்தலைச்சாத்தனார்
பாடல்களில் தவறுகளைக் காணுகின்ற போது தன்னுடைய கையிலுள்ள எழுத்தாணியால் தலையிலே
குத்துவார். இதனால், இவருக்கு சீத்தலைச் சாத்தனார் என்று
பெயர் வந்ததாகக் கூறுவார்கள்.
செண்பகப் பாண்டியனுக்கு ஏற்பட்ட
ஐயத்தைத் தீர்த்து வைக்கத் தருமி மூலம் சிவன் அனுப்பி வைத்த பாடலாகிய
‘கொங்குதேர் வாழ்க்கை அஞ்சிறைத்
தும்பி
காமம் செப்பாது கண்டது மொழிமோ
பயிலியது கெழீஇய நட்பின் மயிலியல்
நறியவும் உளவோ நீ அறியும் பூவே’’
என்னும் பாடலிலேயே குற்றம் கண்டு
பிடித்து நெற்றிக்கண்ணைத் திறப்பினும் குற்றம் குற்றமே என்று வாதிட்டவர் நக்கீரர்.
இவ்வாறான இலக்கியப் பாரம்பரியம் கொண்ட நம் தமிழ் இலக்கியம் இன்று தவறுகளைக்
கண்டும் காணாதிருக்கின்றது.
அடுத்து எழுத்துக்களில் ஒழுக்கக்
கேடான நாகரிகம் அற்ற விரசத்தை எழுதுதல். அதற்கான அங்கீகாரத்தை எழுத்துலகம்
வழங்குதல். இவ்வாறான எழுத்துக்கள் மூலம் சமூகத்திற்கு எழுத்தாளர் எதைக் கொடுக்கப்
போகின்றார்கள் என்று புரியவில்லை. ஜான்ரஸ்கின் எழுதிய ‘கடையேனுக்கும் கடைத்தேற்றம்’’
என்ற நூலே மகாத்மாகாந்தியின் வாழ்க்கையைப் புரட்டிப்போட்டது என்பார்கள். ஒரு
எழுத்தாளனின் கைமுனைப் பேனா, சமூகத்தை தலை நிமிர்த்தி நிறுத்த
வேண்டும். அதைவிடுத்து எதிர்கால சமூகத்துக்கு கிளுகிளுப்பை ஏற்படுத்தி அறிவை
விடுத்து அழிவுப் பாதைக்கு அழைத்துச் செல்லலாமா?
தோள்சீலைப் போராட்டங்களுக்குப்
பின்புதான் பெண்கள் மார்புச் சீலையே போட்டார்கள். நங்கேலி என்னும் பெண்
முலைவரிக்கு எதிராகத் தன்னுடைய மார்பகங்களையே வெட்டிக் கொடுத்து இறந்தாள்.
இவ்வாறாகப் போராடிப் பெற்ற எமது உரிமைகளின் மகத்துவத்தின் வரலாறு தெரியாமல்
எழுத்திலும், உணர்விலும் விரசத்தைக் கொட்டுபவர்களுக்குப் பெண்கள் மலர்மாலை
சூட்டிப் பாலாபிஷேகம் செய்வது வருந்தத்தக்கதே.
தமிழ்மொழி தெய்வீகமொழி என்று
போற்றப்படுகின்றது. கற்புடைய கண்ணகியைத் தெய்வமாகப் போற்றிய மொழி, காரைக்காலம்மையார் புராணத்தின் மகத்துவம்
உணர்த்திய மொழி, வள்ளுவப் பெருந்தகையின் உலகத்துக்கே
வாழ்விலக்கியம் கூறும் திருக்குறள் தோன்றிய மொழி. அதிலும் காமத்துப்பால்
நாகரிகமாகக் கற்பிக்கப்பட்டுள்ளது.
பல்லவர் காலப் பக்தி இலக்கியங்களின் பெருமையை இன்றும் போற்றுகின்றோம், சோழர்கால ஆட்சியில் மொழியும் மதமும் எவ்வாறு
பாதுகாக்கப்பட்டது என்று அறிந்திருக்கின்றோம்.
நாயக்கர் காலச் சிற்றிலக்கியங்களின்
பெருமையைக் கற்றிருக்கின்றோம், ஐரோப்பியர் காலத்திலே மேலைத்
தேயத்தவர்கள் எம்மொழிக்கு எவ்வாறெல்லாம் சேவை செய்திருக்கின்றார்கள் என்று
அறிகின்றோம். அவ்வாறாகப் போற்றிப் பாதுகாக்கும் எம்முடைய மொழியில் தற்காலத்தில்
போற்றிப் பாதுகாக்கப்படும் பின் நவீனத்துவம் என்று படைக்கப்படும் சில இலக்கியங்கள்
பின் நவீனத்துவம் பற்றிய சரியான புரிதல் இல்லாமலேயே வாசகர்களுக்குக் கற்பிக்கப்படுகின்றன
என்று கருதுகிறேன்.
எழுத்துக்கள் மந்திரம் மட்டுமல்ல, அது நல்ல வசியமுமாகும். எழுத்துச்
சுதந்திரம் என்று காம இச்சைகளை ஏற்படுத்துகின்ற எழுத்துக்கள் வாசகர்களுக்கு
அருவருப்பை ஏற்படுத்துவது மட்டுமல்ல அச்சத்தையும் ஏற்படுத்துகின்றன. வெளிப்படையாக
எழுதுகின்றோம் என்று எழுதும் போது அவ் எழுத்துக்கள் காமசூத்திரம் ஒளிந்து இருப்பது
போல் தேடிப் படிக்க வைக்காமல், பாரதியின் எழுத்துக்கள் போல பட்டி
தொட்டி எங்கும் எழுத்துக்கள் பவனி வர எழுத வேண்டும்.
தமிழ் இலக்கணத்தில் சொற்கள்
வழங்கப்படும் முறையில் இயல்பு வழக்கு, தகுதி வழக்கு என இரண்டு வழக்குகள்
பயன்படுத்தும் முறைகள் இருக்கின்றன. அதில் தகுதி வழக்கு என்பது நன்மக்களிடத்தில்
சான்றோர் அவையிலே கூறத்தகாத சொற்களை மறைத்து வேறு சொற்களால் கூறுதல். உதாரணமாக
மலம் கழுவி வருதல் என்பதைக் கால் கழுவி வருதல் என்பார்கள். செத்தாரைத் துஞ்சினார்
என்றும், சுடுகாட்டை நன்காடு என்றும்
சொல்வார்கள்.
சிந்து பைரவி என்னும் திரைப்படம்
இரண்டு சோடிச் செருப்புகளைக் காட்டி நாகரிமாக உடலுறவை வெளிப்படுத்தியது. இவ்வாறு
எமது மொழி பேச்சிலும், எழுத்திலும், நடத்தையிலும் பண்பாட்டு நாகரீகத்தைப் போதித்தது. ஆனால், தற்காலத்தில் தம்மை வேறுபடுத்திக் காட்டுவதற்காக
ஒரு சமூகம் சில கட்டுப்பாடுகளை மீறிய எழுத்துக்களால் கைதட்டுப் பெறுகின்றது. படுக்கை
அறைக்குக் கதவு தாழ்ப்பாள் இடப்பட்டுள்ளது. பள்ளியறை
தேவை இல்லையென்றால் தாம் பெற்ற வயதான பிள்ளைகளும் அவர்களைப் பெற்றவர்களும்
வரவேற்பறையில் மகிழ்ச்சியாகப் பள்ளி கொள்ளலாம்.
இக்கட்டுரை 09.09.2025 வெற்றிமணி பத்திரிகையில் வெளிவந்தது .