• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    செவ்வாய், 20 ஆகஸ்ட், 2024

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

     


    ஆங்கிலேயர், போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிருந்து மாறிப் போர்ச்சூழலின் காரணமாகப் புலம்பெயர்ந்த இலங்கைத் தமிழர்களும், பணி நிமிர்த்தமாகப் புலம்பெயாந்த இந்தியத் தமிழர்களும் இலகுவாகப் புலம்பெயர்ந்து தாம் வாழுகின்ற நாட்டினரின் பண்பாட்டிற்குத் தாமாகவே மாறக்கூடிய சூழ்நிலை தற்போது ஏற்பட்டிருக்கின்றது என்னும் விடயம் பொதுவாகவே எல்லோரும் ஏற்றுக் கொள்ள வேண்டிய ஒரு அம்சமாகும் என்று கூறி என்னுடைய உரைக்குள்ளே நுழைகின்றேன்.

     ஜெர்மனியில் வாழுகின்ற தமிழர் பண்பாட்டு மாற்றம் என்ற விடயத்தை முதலில் எடுத்து நோக்குவதற்கு முன் பண்பாடு என்றால் என்ன? ஜெர்மனியர் பண்பாட்டுக் கூறுகள் எவை? தமிழர்களுடைய பண்பாட்டுக் கூறுகள் எவை? தமிழர்களின் பண்பாட்டுக் கூறுகள் தற்போது எவ்வாறு மாற்றத்தைக் கண்டுள்ளது என்பவற்றை எடுத்து நோக்க வேண்டும்.

     1350 கோடி ஆண்டுகளுக்கு முன்  உலகம் தோன்றியது. 450 கோடி ஆண்டுகளுக்கு முன் பூமி தோன்றியது. 350 கோடி ஆண்டுகளுக்கு முன் உயிரினங்கள் தோன்றிவிட்டன. 60 இலட்சம் ஆண்டுகளுக்கு முன் ஹோமோ பேரினத்துக்கும் சிம்பன்சிகளுக்கும் பொதுவான மூதாதையர்கள் தோன்றினார்கள் எனச் “சேப்பியன் மனித குலத்தின் ஒரு சுருக்க வரலாறு” என்னும் நூலிலே யுவா நோவால் ஹராரி என்பவர் கூறுகின்றார். பரிணாம வளர்ச்சியின் பின்னே மனித இனம் தோன்றியது. அது பிறந்து இறந்து பின் புதிதாய்ப் பிறந்து எனத் தொடர்ந்து வாழ்ந்து வருகின்றது. ஆரம்பகாலத்தில் உண்ணவும், உறங்கவும் வாழ்ந்த மனிதனின் சிந்தனை வளர்ச்சியுற்றதன் காரணத்தால், மனிதனின் பண்பாட்டுக் கூறுகளில் காலத்துக்குக் காலம் மாற்றம் ஏற்பட்டுக் கொண்டே வருகின்றன. காலநிலை, பௌதீக சூழலினால், பண்பாட்டுக்கூறுகளில் மாற்றம் ஏற்படுகின்றது. பண்பாடு என்பது எழுதப்படாத சட்டம் என்பதை சுவாமி விவேகானந்தர் கூறியிருக்கின்றார்.

     ஆய்வறிஞர்கள் பண்பாடு பற்றி என்ன சொல்கிறார்கள் என்று பார்த்தால், கிரேக்கர், உயர் பண்புடமையைப் பண்பாடு என்கின்றார்கள். Mathew Arnold என்ற மொழி ஆய்வாளர் கூறும் கல்சர் என்ற சொல்லுக்குரிய விளக்கமானது பண்பாடு என்ற சொல்லுடன் பொருந்தி வருகின்றது. Pascal Gisberd என்னும் அறிஞர் தன்னுடைய ஆய்விலே சூழ்நிலை சமூகநிலைக்கேற்ப உளம் சார்ந்து உருவாவதே கலாசாரம் என்கிறார். நிலத்தின் பண்பட்டநிலை அக்ரிகல்சர் (Agriculture) போல் மனத்தின் பண்பட்டநிலை பண்பாடு. இதே பொருளில் எமது பழந்தமிழ் இலக்கியங்களில் சொற்கள் கையாளப்பட்டிருக்கின்றன. உதாரணமாக 'பண்பெனப்படுவது பாடறிந்தொழுகல்” என நெய்தற்கலி 16 இலும், வள்ளுவர் திருக்குறளிலே “பண்புடைமை“ என்ற தலைப்பில் ஒரு அதிகாரத்தையும் கையாண்டிருப்பதைக் காணக் கூடியதாகவுள்ளது. பண்புபடுதல், பண்பாடு எனப்படுகின்றது. எனவே மனிதனின் பண்பட்ட நிலையே பண்பாடு என்பதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

     எப்படி என்றால். சிந்துவெளிநாகரிக காலத்துப் பண்பாட்டுக் கூறுகள் அக்காலச் சூழலுக்கமைய அமைந்திருந்தன. சங்கம் தொட்டு இன்று வரை பண்பாட்டில் மாறுபாடுகள் ஏற்பட்டுக் கொண்டுதான் வந்திருக்கின்றன. சங்ககாலத்தில் கள்ளுக் குடித்தல் ஒரு கூறாக இருந்தபோது அது குற்றமாகக் கருதப்படவில்லை. சமணர் வருகை அதைக் குற்றமாகக் காட்டியது. பெண்டீர் பலரை மணக்கும் வாய்ப்பு இருந்த போது அது பண்பாட்டுக் குறையாகச் சொல்லப்படவில்லை. எனவே காலத்துக்குக் காலம் மாறுபாடுகள் ஏற்பட்டுக் கொண்டே வந்திருக்கின்றன. எனவே மக்களது அறிவுநலம், கொள்கைநலம், ஒழுக்கநலம், வாழ்க்கைநலம் போன்றவை பண்பட்டநிலையே பண்பாடு என்று  முடிவுக்கு வரவேண்டியுள்ளது. அதாவது மனிதர்களின் வரலாறு, போக்குகள், பண்புகள், புரிந்துணர்வுகள், அறிவு பரம்பல்கள், வாழ்வியல் வழிமுறைகள், சமூக கட்டமைப்பு என்பனவற்றைச் சுட்டி நிற்கின்றது.

     இந்த பண்பாடு என்பது மூன்று மூலகங்களை உள்ளடக்கியுள்ளது என்பதை நாம் விபரமாக நோக்க வேண்டும்.  அவை, 'பெறுமானம், நெறிமுறைகள், பொருட்கள் என்பன. பெறுமானம், என்பது எண்ணங்கள். அதாவது வாழ்வில் முக்கியமானது எது என்பது பற்றிய எண்ணங்கள், இந்த எண்ணங்களே மற்றைய அடுத்து நெறிமுறைகளை வழிநடத்துகின்றது. நெறிமுறைகள் என்பது ஒரு இனத்தின் நடத்தைகள். அதாவது வெவ்வேறு சந்தர்ப்பங்களில் மக்கள் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஆகும். பொருட்கள் அல்லது பொருள்சார் பண்பாடு என்பது பெறுமானங்கள் மற்றும் நெறிமுறைகள் ஆகியவற்றிலிருந்து பெறப்படுகின்றது. ஒவ்வொரு பண்பாட்டுக் குழுவும் இந்தப் பொது வழக்கங்களை நடைமுறைப்படுத்துவதற்கான வழிமுறைகளைக் கொண்டுள்ளன. எனவே தமிழர்கள் வாழ்வதற்கு எது முக்கியம் என்ற எண்ணப்போக்கும், அதனை நடைமுறைப்படுத்துவதற்குரிய நெறிமுறைகளை மாற்றியமைப்பதும்,  இவற்றுக்கான தேவைகளை முன்னெடுப்பதும் பண்பாட்டில் மாற்றத்தைக் கொண்டு வருகின்றது.

     இப்போது பண்பாட்டானது மொழி,  இசை, இலக்கியம்,  வாழ்க்கைமுறை, உணவு, உடை, ஓவியம், சிற்பம், நாடகம், திரைப்படம் போன்ற மனிதருடைய கலைப் பொருள்களிலும் நடவடிக்கைகளிலும் வெளிப்படுகின்றது.

     இதிலே பல்பண்பாட்டியம் (Multiculturalism ) என்பதை நாம் உற்று நோக்க வேண்டும்.  வருகுடியேற்றப் பண்பாட்டினர் தமது பண்பாடுகளைப் பேணிக்கொள்ள வேண்டும் என்றும், பல்வேறு பண்பாடுகள் ஒரு நாட்டுக்குள் அமைதி வழியில் தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்பதும் இதன் கருத்து ஆகும். இதன்வழியே ஜெர்மனிக்குள் புகுந்த தமிழ் மக்கள் வாழ வேண்டிய சூழ்நிலை ஏற்படுகின்றது. உயர் பண்பாட்டின் சில அம்சங்கள் மனித இயல்புகளை அழுத்தி வைத்திருப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆயினும், ஜெர்மனியில் வாழுகின்ற தமிழ் மக்களிடம் தற்போது காணப்படுவது கலப்புப் பண்பாடாகின்றது. இதன்படி எல்லா வருகுடியேற்றப் பண்பாடுகளும் அரசின் தலையீடு இல்லாமலேயே கலந்து ஒன்றாகின்றன. ஒன்றிலிருந்து ஒன்று விலகி வாழுகின்ற மக்கள் குழுக்கள் அதாவது புலம்பெயர்ந்து ஜெர்மனிக்குள் குடிபுகுந்த மக்கள் தங்களுக்கெனத் தனித்துவமான பண்பாடுகளை உருவாக்கிக் கொள்ளுகின்றன. எனினும் வெவ்வேறு பண்பாடுகளின் அம்சங்கள் ஒரு குழுவிலிருந்து இன்னொன்றுக்கு இலகுவாகப் பரவ முடியும்.

     அடுத்து பண்பாட்டைப் புவியியலும் தீர்மானிக்கின்றது. உதாரணமாக ஒரு நாட்டின் காலநிலைக்கேற்ப ஆடை, உணவு வகைகள் தீர்மானிக்கப்படுகின்றன. ஜெர்மனிய மக்கள் தமிழர்களின் புடவை, ஜெர்மனிய காலநிலைக்கு ஏற்றதாக அமையவில்லை. இறுக்கமான தடிப்பான காற்சட்டையும் அக் காற்சட்டைக்குள் இன்னும் ஒரு காற்சட்டையும் அணிய வேண்டிய அவசியம் தமிழர்களுக்கு ஏற்படுகின்றது. இடை, முதுகு தெரியும் படியான சேலைக்கு உகந்த மேலங்கியை தமிழர்கள் அணிந்தால் குளிரின் தாக்கத்தினால், முதுகுவலி, எலும்பு நோய்களை அனுபவிக்க வேண்டிய சூழ்நிலை தமிழ்ப் பெண்களுக்கு ஏற்படுகின்றது. இதனால், ஆடை விடயத்தில் பண்பாடு காலநிலை சூழலுக்கேற்ப மாறுபாடடைகின்றது.

     ஒரு இனத்தின் குணநலன்கள் பிறப்பிலேயே வருவதில்லை. பிறந்தசூழல், வளரும், வாழும் சூழலுக்கேற்பவே அமையும். தொடக்கத்தில் இருந்த குணங்கள் பரிணாமவளர்ச்சி, அறிவுவளர்ச்சி மேம்பட விரிவடையும். வெவ்வேறு இனங்களாகப் பிரிந்து மாறுதலடையும், இல்லை மறைந்து போகும். இதுவே இன்றைய எமது இளந்தலைமுறையினர் நிலையாக இருக்கின்றது. எங்கள் இளந்தலைமுறையினர் சூழல் சுற்றம் நோக்கியே தம் வாழ்க்கைப் பாதையைக் கடக்கின்றனர் என்பது கண்கூடு. ஆனால் அவர்கள் காலில் சக்கரம் பூட்டப்பட்டிருக்கின்றது. கையில் மௌசை வைத்துக் கொண்டு உலகத்தையே காலடிக்குக் கொண்டு வருகின்றனர். அவர்கள் வெற்றிப்போக்கில் பண்பாடு கண்ணுக்குத் தெரிவதில்லை. தாம் வாழுகின்ற சூழலுக்கேற்பத் தம்மை மாற்றிக் கொள்வார்கள். 1871ம் ஆண்டு ஆராய்ச்சியில், ஒரு ஓநாயுடன் சேர்ந்தே வளருகின்ற ஒரு மனிதக் குழந்தையானது ஓநாயுடைய இயல்புகளைப் பெற்றிருப்பதாக டார்வின் எடுத்துக்காட்டுகின்றார். சுற்றுச் சூழலில் இருந்து அகற்றப்படுகின்ற குழந்தை தண்ணீரிலிருந்து அகற்றப்பட்ட மீன் போலாகும். எனவே வாழும் சூழலிலுள்ள தவறான போக்குகள், அவர்கள் பாதையில் பங்கம் விளைவிக்காத வகையில் பெற்றோர் பார்வையானது இருக்க வேண்டியது அவசியமாகின்றது.  நீருக்குள் நின்றபடி நீரின் சிறந்த அம்சங்களை பெற்றுக் கொண்டு வாழுகின்ற பக்குவநிலையை பிள்ளைகளுக்குப் பெற்றோர் மூலம் போதிக்கப்பட வேண்டும். பெற்றோர் முதலில் வாழும் சூழலைக் கற்றிருக்க வேண்டியது அவசியமாகின்றது. சமுதாய வளர்ச்சிக்கேற்பத் தாமும் வளர்ந்திருக்க வேண்டியதும் கடமையாகின்றது.

     இப்போது ஜெர்மனிய பண்பாட்டைப் பற்றியும் எம்முடைய பண்பாட்டுக் கூறுகளின் மாற்றங்கள் பற்றியும்  தொடர்பு படுத்தி நோக்குவோம். ஜெர்மனியர் பண்பாடு என்னும் சொல்லைப் பயன்படுத்துவது இல்லை. அவர்கள் கலாசாரம் என்ற சொல்லையே Kultur என்று கூறுவார்கள். Mr..Frank Plümacher என்பவரை ஜெர்மனியர் கலாசாரம் பற்றி அறிவதற்காக நேரடியாக நான் பேட்டி கண்டேன். இவர் சமூக தொழில்கள், சுகாதாரம், ஊட்டச்சத்து தொழில்களுக்கான தொழில்முறை கல்லூரியின் அதிபராகப் பணிபுரிகின்றார். அவர் கூறிய விடயங்களையும், எனது அனுபவங்களையும், கற்றறிந்த பிற தகவல்களின் தொகுப்புக்களையும் இங்கு தர இருக்கின்றேன்.

     

    ஜெர்மனி இரும்பைக் கொண்டு உலகத்தைத் திரும்பிப் பார்க்க வைக்கும் பூமி. இது ஒரு ஜனநாயகக் குடியரசு. இது 357,386 கிமீ பரப்பளவு கொண்ட நாடாகும். டென்மார்க், போலந்து, சுவிஸ், பிரான்ஸ், லக்ஸம்பேர்க், நெதர்லாந்து போன்ற நாடுகள் ஜெர்மனியைச் சூழவுள்ளன. ஜெர்மனிய அதிபராக தற்போது Frank-Walter Steinmeier (2024) இருக்கின்றார். 1949 இல் இருந்து 3 oktober 1990 வரை கிழக்கு ஜெர்மனி மேற்கு ஜெர்மனி எனப் பிரிக்கப்பட்டு இருந்தது. 1961 கட்டப்பட்ட சுவர் 1989ல் உடைக்கப்பட்டது. தற்பொழுது 16 மாநிலங்கள் கொண்ட ஒரு ஜனநாயக நாடாக விளங்குகின்றது.

    ஜெர்மனியர்களுடைய பண்பாடு கடந்த 100 வருடங்களாக பல மாற்றங்களைக் கண்டிருக்கின்றது. ஜெர்மனியில் ஏறக்குறைய  8 கோடி 30 இலட்சம் மக்கள் வாழ்கின்றார்கள். இதில் கிட்டத்தட்ட 12 மில்லியன் மக்கள் வெவ்வேறு பண்பாடு உடையவர்களாக இருக்கின்றார்கள். ஏனென்றால். வெவ்வேறு நாடுகளில் இருந்து பல இன மக்களை ஜெர்மனி ஏற்றுக் கொண்டிருக்கின்றது. ஜெர்மனில் அண்ணளவாக 60,000 தமிழர்கள் வாழ்கின்றார்கள் மாசி மாதம் 2020 கணக்கீடு தெரியப்படுத்துகின்றது. ஜெர்மனிக்கு வந்த முதல் இந்தியத் தமிழர் திமுத்தேயஸ் என்பவராகும். இவர் தன்னுடைய பெயரை இவ்வாறு திமுத்தேயஸ் என்று மாற்றி அமைத்துள்ளார். இவர் 1711 ஆம் ஆண்டு புரட்டாதி மாதம் பிளேட்டோ என்பவருடனேயே ஜெர்மனியை வந்தடைந்தார். ஈழத்தமிழர்களுடைய வருகை 1970 இல் இருந்துதான் ஜெர்மனியில் ஆரம்பிக்கின்றது. இருந்தாலும் 1983 இன் பின்தான் அதிக அளவில் வரத் தொடங்கினார்கள். பெரும்பாலானவர்கள் அரசியல் தஞ்சம் கோரி வந்தவர்களே ஆவர். இவர்கள் ஜெர்மனியின் பல பாகங்களுக்கு வாழ்வதற்காக அனுப்பப்பட்டார்கள். இதனால், ஒவ்வொரு நகரத்தையும் எடுத்துப் பார்க்கின்ற போது தமிழர்களுடைய செறிவு குறைவாகவே காணப்படுகின்றது.

     

     ஜெர்மனியப் பாடசாலை அமைப்புக்களும், தொழில் முறையும் தமிழ் மக்களும்.

     

    ஜெர்மனியில் 1780, 90 களில் பாடசாலைக் கல்வி கட்டாயப்படுத்தப்பட்டது. 6 வயதிலிருந்து 15 வயதுவரை கட்டாயக் கல்வி போதிக்கப்பட்டது. அதன்பின் விரும்பியவர்கள் வேலைக்கான தொழிற்கல்வி கற்பார்கள். முடிதிருத்துபவர், கடைகளில் விற்பனை செய்பவர்,  பேரூந்து ஓட்டுனர்,  மெக்கானிக்கர்,  கட்டிடக்கலை, போன்ற 180 க்கும் மேற்பட்ட வேலைகளுக்கான பயிற்சியை தொழில்முறைக்கல்வியாகக் கற்பார்கள். 1,5 மில்லியனுக்கும் மேற்பட்ட மாணவர்கள் கைவினைத் தொழில்கள், தொழில்நுட்பத் தொழில்கள் போன்ற வேலைகளுக்கான பட்டப்படிப்பை மேற்கொள்ளுகின்றார்கள். இவை அனைத்தும் பாடசாலைக் கல்வி போல் இலவசமாகக் கற்பிக்கப்படுகின்றது. எவ்விதமான இன, வயது வேறுபாடும் இல்லாமல் தகுதி அடிப்படையிலேயே கற்பிக்கப்படுகின்றது. 10ம் வகுப்பு முடிந்தபின் 12 ஆம் வகுப்பு வரை படிப்பை முடித்து வேலைக்கான கல்வியைப் பெறுகின்ற மாணவர்களும் இருக்கின்றார்கள். அதற்கு மேல் படிப்பவர்கள் பல்கலைக்கழகங்களில் கல்வி கற்பார்கள். 150 க்கும் மேற்பட்ட பல்கலைக்கழகக் கல்வியும் ஜெர்மனியில் இருக்கின்றன. உலகத்துடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது குறைவான வேலையில்லாதவர்களே ஜெர்மனியில் இருக்கின்றார்கள். 20 வீதமான மக்கள் தமக்கு இலகுவான வாழ்க்கை தான் வாழ விரும்புகின்றார்கள். தமக்கு எதுவுமே வேண்டாம் என்று வீட்டிலே இருப்பதுதான் பிடிக்கும் என்றாலும் அரசாங்கம் அவர்களுக்குப் பணம் கொடுத்து வாழ்வாதார வசதிகளைச் செய்து கொடுக்கும். தாயகத்தில் வேலை செய்து ஊதியம் பெற்றாலேயே வாழமுடியும் என்ற பண்பாடு ஜெர்மனியில் இல்லை. எந்தவித தொழிலும் செய்யாமல் சிறந்த வாழ்க்கை வாழ்வதற்குரிய வசதி வாய்ப்புக்களை ஜெர்மனிய அரசாங்கம் வழங்குகின்றது.

     

    யாராவது படிக்க விரும்பினால்,  ஏதாவது வேலை செய்ய விரும்பினால்,  தடைகள் இல்லாமல் ஜெர்மனியில் முன்னுக்கு வர சுதந்திரம் இருக்கின்றது. அயல்நாடுகளில் இருந்து வந்து இங்கு படிக்க விரும்புபவர்கள் http://www.daad.de/deutschland/index.en.html .

    என்ற இணையத்தளத்தில் தகவல்களைப் பெற்று கற்கும் வாய்ப்புக்கள் உண்டு.

     

    மேலதிகமாக ஜெர்மனிய கல்வி முறைகளைப் பற்றி அறிய விரும்புபவர்கள் kowsy2010.blogspot.com என்னும் என்னுடைய வலைக்குச் சென்றும் வாசித்து அறியலாம்.

     

    புலம்பெயர்ந்து வந்த எம்முடைய தமிழர்கள் அந்நியமொழி, பண்பாட்டு மாற்றம், காலநிலை மாற்றம், உறவினர்களின் பிரிவு, போர்ச்சூழலின் மனஅழுத்தம், நிரந்தரமாக இங்கு வாழமுடியுமா என்ற சந்தேகம், இங்கு பணம் சம்பாதித்துத் தமது கடன்களை அடைப்பதற்காக தாய்நாட்டிற்கு அனுப்ப வேண்டிய தேவை, வாழ்விட மொழிகளைக் கற்க வேண்டிய அவசியத்தை அறியாமை போன்ற காரணங்களினால் ஜெர்மனி மொழியைக் கற்கவில்லை. தாயகத்தில் என்ஜினியர் போன்ற மேற்படிப்புப் படித்தவர்கள் ஜெர்மனியில் உணவகங்களிலும், வியாபார ஸ்தாபனங்களிலும் தொழில் செய்கின்ற நிலைமையைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆனால், அவர்களுடைய பிள்ளைகள் தற்போது இக்கல்விச் சூழலிலே வாழ்ந்து சிறந்த முறையில் கல்வியைத் தொடருகின்றார்கள்.

     

    ஜெர்மனி மொழியும் தமிழில் தாக்கமும்:

     

    ஜெர்மனிய கலாசாரத்தில் முக்கியமானது அவர்களுடைய ஜெர்மன் மொழி ஆகும். இது ஆங்கில எழுத்துக்களைக் கொண்டிருக்கின்றது. ஆனால் உச்சரிப்பில் மாற்றங்களைக் கொண்டிருக்கின்றது. அத்துடன் ä, ö, ü. ß போன்ற வித்தியாசமான எழுத்துக்களும் இருக்கின்றன.

     

     

     

    இம்மொழி எவ்வாறு எம் இனத்தினரிடையே தாக்கத்தை ஏற்படுத்தியிருக்கின்றது என்று பார்க்கும் போது, மொழியைப் பொறுத்த அளவில்

     இரண்டு வாரங்களுக்கு ஒருமுறை உலகில் ஏதோ ஒருமூலையில் ஒரு மொழி அழிவதாக மொழியியலாளர்கள் தெரிவிக்கின்றார்கள். ஒரு மொழி அழிகின்ற போது அதன் பண்பாட்டு அம்சங்களும் அழிந்துவிடுகின்றன. உலகிலுள்ள 600 கோடி மக்கள் 6000 மொழிகளைப் பேசுகின்றார்கள். 3000 மொழிகள் ஆயிரத்துக்கும் குறைவானவர்கள் பேசுகின்றார்கள். அதிகமான மக்கள் பேசுகின்ற 20 மொழிகளுள் தமிழ்மொழியும் ஒன்றாகக் காணப்படுகின்றது. இவ்வாறான தமிழ்மொழி எமது பண்பாட்டைச் சுமந்து செல்கின்ற வண்டியாகக் காணப்படுகின்றது.  ஜெர்மனியிலே 1964 ல் கொலோன் பல்கலைக்கழகத்திலே தமிழ்த்துறை ஆரம்பிக்கப்பட்டது. இங்கு தமிழிலே இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டங்கள் பெற்றுக்கொள்ள வாய்ப்புள்ளது. இங்கு தமிழ் நூல்கள் 45,000 இருக்கின்றன. ஹம்பேர்க் என்னும் நகரத்திலும் 2017 இல் தமிழ்த்துறை ஆரம்பிக்கப்பட்டு இளங்கலை, முதுகலைப் பட்டங்கள் பெறுவதற்கு வாய்ப்புக்கள் உண்டு. இங்கு பேராசிரியரான Eva Weldone என்பவர் தன் ஆராய்ச்சிக்குப் பழந்தமிழ் நூல்களைக் கருப்பொருளாகக் கொண்டு ஓலைச் சுவடிகளைப் பாதுகாக்கும் பணிகளில் ஈடுபட்டுள்ளார். Türingen, Göttingen போன்ற இடங்களிலுள்ள பல்கலைக்கழகங்களிலும் தமிழை ஒரு பாடமாகக் கற்கக் கூடிய வாய்ப்புக்கள் உள்ளன. ஆனால்,  எம்முடைய தமிழ் மாணவர்கள் தமிழ் மொழியைக் கற்பதற்கு நாட்டம் குறைந்தவர்களாகவே காணப்படுகின்றார்கள். 1000 க்கு மேற்பட்ட அந்நியநாட்டுப் பிள்ளைகள் படிக்கின்ற பாடசாலையில் 4, 5 பிள்ளைகளாகவே தமிழ் பிள்ளைகள் படிக்கின்றார்கள். அவர்கள் கூட ஒருத்தரை ஒருத்தர் சந்திக்கும் சந்தர்ப்பங்களில் தமது கல்விமொழியையே பேசுகின்றார்கள். தம்முடைய வாழ்வாதார மொழிகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பதற்கும் தம்முடைய மேற்கல்வியை தொடர்வதற்கும் ஜெர்மனி மொழியையே இலகுவாக கைக் கொள்ளுகின்றார்கள்.

     அதைவிடக் கூடிய நேரத்தை அந்நியமொழிக்காரருடன் செலவுசெய்யும் இவர்கள் வீட்டில் பெற்றோருடன் தமிழ்மொழியில் உரையாடுவார்கள் என்று பார்த்தால், வீட்டில் தொலைக்காட்சியுடனும் கணனியுடனும் தமது பொழுதைக் கழிக்கின்றனர். மொழி கற்பதற்காகத் தொலைக்காட்சித் தொடர்பை ஏற்படுத்தினோமேயானால், அதில் பண்பாட்டுச் சீர்கேடுகள் நிறைந்தே காணப்படுகின்றன. எனவே மொழியின் முக்கியத்துவம் நோக்கிப் பெற்றோர் தமது பிள்ளைகளின் மொழியறிவை அதிகரிக்கச் செய்யும் வகையில், மொழியில் கவர்ச்சியை ஏற்படுத்தவல்ல கலைகளைத் தமிழ்மொழியில் கற்பிப்பதன் மூலம் தமிழ்மொழியில் நாட்டம் கொள்ளச் செய்கின்றார்கள். ஜெர்மனியில் தமிழ் வளர்க்கும் பணியில் தமிழாலயங்கள், ஜெர்மனி கல்விச்சேவை, கல்விக்கழகங்கள் என்னும் நிறுவனங்கள் பணியாற்றுகின்றன. இவற்றை நடத்துகின்ற தலைமுறையினரின் பின் அடுத்த தலைமுறை மொழியை எந்த அளவிற்குக் கொண்டு செல்லும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. இங்கு கல்வி பயிலும் மாணவர்கள் தமிழ்  கற்பதுடன் மட்டும் நின்று விட்டுப் பயன்பாட்டை நிறுத்திவிடுகின்றனர். இதனால், மொழிப்பண்பாடு ஜெர்மன் மொழி பண்பாட்டை நோக்கி நகர்வதைத் தடுக்கமுடியாதுள்ளது. அத்துடன் ஜெர்மனி மொழிப்பயன்பாடு இளந்தலைமுறையினருக்கு அவர்களுடைய வாழ்க்கையை மேம்படுத்த அத்தியாவசியமாகின்றது.

     அடுத்தது ஜெர்மனியில் இசையை எடுத்துக் கொண்டால், அதிகமான இசையமைப்பாளர்கள், பாடகர்கள் இசையை மேம்படுத்த 100 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வாழுகின்ற கிராமத்தில் ஒரு தியேட்டர் இருக்கும். அங்கு 50,60 இசைக்கலைஞர்கள் சேர்ந்து இசை நிகழ்ச்சிகள் செய்வார்கள். நிரந்தர ஊழியர்களை நல்ல ஊதியத்துடன் அமர்த்தி இசை நிகழ்ச்சிகளை மக்களுக்காக மீண்டும் மீண்டும் நடத்துகின்றார்கள். பலவிதமான இசைநிகழ்வுகள் உதாரணமாக மரபு சார்ந்த பரம்பரை இசை, நவீன இசை நிகழ்வுகள் என் பலவகையானவற்றை நடத்துகின்றார்கள். இவற்றில் அதிகமான ஈடுபாடுடைய எம்முடைய இளம் தலைமுறையினர் ஜெர்மனிய இசைக்கல்லூரிகளில் பியானோ, வாய்ப்பாட்டு, வயலின் போன்ற இசைகளைப் பயின்று வருகின்றனர். கர்நாடக சங்கீதம், இசையைப் பயின்று அரங்கேற்றம் செய்த பிள்ளைகள் தமது இசையிலும் நடனத்திலும் ஜெர்மனிய இசை வடிவங்களையும் நடன வகைகளையும் இணைத்த ஒரு வடிவத்தைக் கொடுப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. எனவே ஜெர்மனி இசைப் பண்பாட்டை நோக்கி எமது தமிழ் பண்பாடு நகர்வதை அவதானிக்கக் கூடியதாக இருக்கின்றது.

     பண்பாடு என்பது தனிமனிதனைச் சார்ந்து நிற்பதன்று தனி மனிதர் பலர் சேர்ந்தது தான் இனம். இனம் பல சேர்ந்ததுதான் சமூகம். எனவே பண்பாடு என்பது இனவழி சமூகத்தின் போக்கைத் தாங்கி நிற்கின்றது.

     அடுத்து ஒரு பண்பாட்டின் மூலவேர்கள் மொழியும் திருமணமுமாகும்.

     

    திருமணம்:

     ஜெர்மனியில் 250 வருடங்களுக்கு முன் திருமணங்களுக்கு பெற்றோர்கள் தேடித்தருகின்ற ஆண், பெண்களையே பிள்ளைகள் திருமணம் செய்ய வேண்டும். ஆனால் இப்போது தம்முடைய துணையைத் தாமே தேடிக் கொள்ளுகின்றார்கள். சமூகரீதியாக 200 வருடங்களுக்கு முன் கிறிஸ்தவ ஆலயங்களிலேயே திருமணங்கள் நடந்தன. 150 வருடங்களுக்கு முன் கோயிலில் அல்லது பதிவு அலுவலகத்தில் நடைபெறும். ஆனால் தற்போது கோயிலுக்குப் போகாமலே 50 வீதமான ஜெர்மனியர்கள் பதிவாளர் அலுவலகத்தில் மட்டுமே திருமணம் செய்கின்றார்கள். பெண்கள் வெள்ளை நிறத்தில் திருமண  ஆடைகள் அணிவார்கள். ஆண்கள் சூட் மற்றும் ரை, தொப்பி அணிவார்கள். திருமணத்திற்கு முன் ஒரு ஆணுடன் தங்கி அவரின் குணநலன்கள் அவர்களுக்குப் பிடித்திருக்கின்றதா? என்று அவதானித்துப் பார்த்து முடிவை எடுத்த பின் திருமணத்தைச் செய்கின்ற பண்பாடு மேலோங்கியுள்ளது. தமிழ் பெண்கள் அல்லது ஆண்கள் ஜெர்மனி நாட்டுத் துணையையோ அல்லது வேற்று நாட்டுத் துணையையோ தேடிக் கொள்ளுகின்றார்கள். திருமணம் அவரவர் தேடிக் கொண்ட துணையுடைய பண்பாட்டின்படியும் தமிழர் பண்பாட்டின்படியும் நடைபெறுகின்ற ஒரு முறையையையும் காணக்கூடியதாக இருக்கின்றது. தற்காலத்தில் ஒரு திருமண வீட்டிற்குச் சென்றால், அங்கு கலப்புத் திருமணம் செய்த தம்பதிகள் பலரைக் காணக்கூடியதாக இருக்கின்றது. தமது இனம், சாதி, மதம் என்று பார்த்துத் திருமணம் செய்த எம்முடைய தமிழ் இனம் இன்று எவ்வித வேறுபாடும் பார்த்து திருமணம் செய்து கொடுக்க முடியாத சூழ்நிலைக்கு வந்திருக்கின்றது. ஜெர்மனியில் அவரவர் தாம் தொழில் புரிகின்ற இடங்களிலுள்ள மக்களுடன் பழகுகின்ற சந்தர்ப்பம் அவர்களுக்கு அவரவருக்குப் பிடித்த ஈர்ப்பை ஏற்படுத்தக் கூடிய நிலைமை ஏற்படுகின்றது. இவ்வாறு எம்முடைய தமிழ் மக்கள் தம்முடைய துணையைத் தாமே தேடிக் கொள்ளும் பண்பாட்டைப் பின்பற்றுகின்றார்கள். எம்முடைய பண்பாட்டு அம்சங்கள் நிறைந்த தாலி கட்டும் வைபவம் கோயில்களில் விமர்சையாகக் கொண்டாடினாலும், பதிவுத் திருமணத்தை ஜெர்மனியரைப் போன்று அவர்கள் அணிகின்ற ஆடைகள் அணிந்து அதேமுறையில் பதிவுத் திருமணத்தைச் செய்கின்றார்கள். திருமணத்தின் முன் Bachelor Party அதாவது Jungesellenabschied party.  இது வீதியில் நின்று பொருட்கள் விற்றுத் திருமணத்திற்குப் பணம் சேகரிப்பது, இந்த பார்ட்டிக்குரிய பண்செலவுகள் நண்பர்களே பொறுப்பேர்ப்பார்கள். திருமணத்தின் பின் நண்பர்களுடன் செலவு செய்யும் நேரம் குறைவதனாலும் குடும்பத்திற்கே நேரம் கூடுதலாகச் செலவு செய்வதனாலும் இந்த பார்ட்டியை ஒழுங்கு பண்ணுவார்கள். இந்தக் கொண்டாட்டம்,  பதிவுத் திருமணத்திற்குரிய சகல ஏற்பாடுகளும் நண்பர்கள் செய்வது போன்ற ஜெர்மனிய திருமண நடைமுறைகளைக் கையாளுகின்றார்கள். இவ்வாறு திருமணப் பண்பாடு ஜெர்மனிய திருமணப்பண்பாட்டை நோக்கி நகர்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.  இது கலப்புத் திருமணத்திற்கும் கலப்புப் பண்பாட்டிற்கும் வழிவகுக்கின்றது. இந்நிலை மொழிக்கலப்பு, பண்பாட்டுக் கலப்புக்கும் ஏதுவாகின்றது.

     முற்காலம் சமூகம் என்ற அமைப்பு சிறிய அளவில் கூட உருவம் கொள்ளாத காலம் அது. சமூகம் என்ற அமைப்பு உருவான காலத்தில், ஒரு சிலரே சேர்ந்து வாழ்ந்தனர். இச்சேர்க்கை ஒரு அமைப்பாக உருவாகும் வரைத் திருமணம் என்ற சமூக அமைப்புமுறை உருவாகவில்லை. ஊரை ஆளும் முறை வர தலைமுறைச் சொத்தாகச் சிலர் அநுபவிக்க விரும்பியபோது திருமணமுறை அறிமுகப்படுத்தப்பட்டது. எந்த உடைமையும் தேவையில்லையென இஷ்டம் போல் அலைந்து திரிந்தநிலை மிகப்பழையநிலை, பின் கால்நடைகள், ஆடவர் உரிமைகள், உடைமைகள் ஆயின, அதன் பின் நிலம் பெண்களின் முதல் உடமைகள் ஆயிற்று. நிலம் உடைமையாக அந்நிலங்களில் பயிர்ச் செய்ய ஆள்த் துணை தேவைப்பட்டது. ஆளைப் பெற்றுப் பெருக்க ஆண் துணை நிரந்தர தேவையாயிற்று. நிலத்தை நிரந்தர உடைமையாகக் காக்கவும் மற்றவர் இடையூற்றிலிருந்து மீட்கவும் பெண்ணுக்கு ஆண்துணை நிரந்தர முதன்மையாயிற்று. இதன் மூலமே திருமணம் என்ற அமைப்பு உருவாயிற்று என க.ப. அறவாணன் தமிழர் மேல் நிகழ்ந்த பண்பாட்டுப் படையெடுப்பு என்ற நூலில் தெரிவிக்கின்றார். திருமணம் ஒருவருக்கு ஒருவர் என்ற நிலையான உளநிலையிலிருந்து தவறி உடல்நிலைக்கு மாற்றப்படும் போது விவாகரத்து மலிவாகப் போகின்றது. இந்தத் திருமணமுறிவுகளுக்கு அடிப்படைக் காரணம் தனிக்குடித்தனமே என உளவியலாளர்கள் கூறுகின்றார்கள்.

     

    விவாகரத்து:

     ஜெர்மனியில் முற்காலத்தில் விவாகரத்து என்பது ஜெர்மனியில் இருக்கவில்லை. அம்முறை இன்னும் கத்தோலிக்க தேவாலயங்களில் இருக்கின்றது. கத்தோலிக்க பாடசாலைகளில் எல்லாம் விவாகரத்துப் பெற்றவர்களுக்கு வேலை கொடுக்கப்பட மாட்டாது. இறுக்கமான திருமண உறவுகளை அவர்கள் பேணுகின்றார்கள். ஆனால், எம்முடைய தமிழ் இளைய தலைமுறையினரிடையே திருமண முறிவுகள் அதிகம் நிகழ்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. தம்மால் தனித்து வாழமுடியும் என்ற நம்பிக்கையை ஆணும் பெண்ணும் கொண்டுள்ளார்கள். இதற்குரிய வசதி வாய்ப்புக்களை இந்த நாடு வழங்குகின்றது. ஜெர்மனியில் வாழுகின்ற தமிழ் இளைய தலைமுறையினர் தனியே வாழ்வதைத்தான் விரும்புகின்றார்கள். விட்டுக்கொடுக்கும் மனப்பாங்கும் சகிப்புத்தன்மையும் குறைந்த இளையவர்கள் இருவரும் வேலைக்குச் செல்லவேண்டிய அத்தியாவசியமும், இருவரும் சமமாகக் கல்வி கற்று அறிவுச்சமத்துவம் வருகின்ற போது விட்டுக் கொடுக்கும் தன்மை இல்லாமல் ஒருவருக்கு ஒருவர் எதிர்த்து பல மணமுறிவுகள நிற்கின்ற தன்மை ஏற்படுகின்றது. இதனால்; திருமணமாகி ஒரு வருடத்திலேயே ஏற்படுகின்ற பல குடும்பங்களைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதேவேளை வயதான எமது தமிழ் சந்ததியினரும் பிரிந்து வாழுகின்ற பண்பாட்டை ஜெர்மனியில் மேற்கொண்டிருக்கின்றார்கள் என்பது ஒரு கசப்பான உண்மையாகும்.

    இப்போதுள்ள வரதட்சணை முறை ஆரியர் சார்பில் தமிழர்களிடம் ஏற்படுத்தப்பட்டிருக்கலாம். பண்டைக் காலத்தில் காதல் மணம் பெருவழக்காய் இருந்தது. காலப்போக்கில் கற்புமணம் முதன்மை பெற்றது. அக்காலப்பகுதியில், பெண்ணைப் பெற்றோர்கள் மணமகனுக்கோ மணமகன் பெற்றோர்க்கோ எதுவுமே கொடுத்ததில்லை. பெற்று, வளர்த்து, ஆளாக்கி நல்வழியில் நெறிப்படுத்திய பெண்ணை ஆண்மகனுக்குக் கொடுத்த பெற்றோர், வேறு யாதும் கொடுக்க வேண்டிய அவசியமில்லை. ஆனால் பெண்ணைத் தன்னுடன் அழைத்துச் செல்லும் ஆண்மகன் பெண்ணின் தாய்க்குப் பால்க்கூலி அல்லது முலைக்கூலி அன்பளிப்பாக அளிக்கும் வழக்கம் முற்காலத்தில் இருந்தது. பழங்குடிகளிடம் ஆடு, மாடு, நிலம், பொருள் ஆகியவற்றைப் பெண்ணின் பெற்றோருக்குக் கொடுத்துப் பெண்ணை எடுக்கும் வழக்கம் இருந்தது. ஆனால், இன்றுள்ள நிலை பெண்பிள்ளையைப் பெற்றோர் ஆண்மகனுக்கு வரதட்சணை கொடுத்தலாக ஆரியமுறை புலம்பெயர்ந்தும் தமிழர்களிடம் தொடர்கின்றது. இதில் வெறுக்கின்ற எமது இளந்தலைமுறையினரின் வெறுப்புக்குப் பெற்றோர் ஆளாகின்றனர்.

     இவ்வாறு எமது மக்களிடம் காணப்படும் சில தவறுகளைக் கூர்ந்து நோக்கும் எமது இளஞ்சந்ததியினர் அந்நிய பண்பாட்டை நாடிச் செல்வது தவிர்க்க முடியாது போகின்றது.

     

     

    உணவு:

     

    ஜெர்மனியர் உணவை வீணாக்க மாட்டார்கள். 2ம் உலக யுத்தத்தின் போது அவர்களுக்கு ஏற்பட்ட தாக்கம் இவர்களுக்கு இன்னும் இருக்கின்றது. இவர்கள் முதன்மை உணவாகப் பாண் உண்கின்றார்கள். அடுத்து முக்கியம் பெறுவது உருளைக்கிழங்கு அத்துடன்  அதிகமாக இறைச்சி உணவு இருக்கும். சலாட், மீன். பட்டாணி அல்லது பருப்பு சூப், மரக்கறிகள் எல்லாம் போட்டு சூப் செய்து குடிப்பார்கள். இங்கு 300 வகையான பாண்வகைகள் உண்டு. அத்துடன்  200 க்கும் அதிகமான வூஸ்ட் என்னும் இறைச்சிவகைகள் உண்டு. காலை உணவாக பாண் முக்கியத்துவப்படுகின்றது. பாணுடன் பாற்கட்டி, ஜேம், வூஸ்ட்களை கலை உணவாக உண்பார்கள். தானியவகைகளை பாலுடன் காலை உணவாகச் சாப்பிடும் பழக்கம் இருக்கின்றது. மதியம் சூடான சூப், நூடில்ஸ் உருளைக்கிழங்கு போன்றவற்றை உண்பார்கள். இரவுச் சாப்பாட்டில் பாண் இருக்கும். ஆனால் ஜேம் இருக்காது பலவிதமான சீஸ்கள் இருக்கும். சீஸ் காலை உணவுக்கும் மாலை உணவுக்கும் முக்கியமானதாகக் கருதப்படுகின்றது. இதைவிட இத்தாலியர், கிரேக்கர், துருக்கி இனத்தவர்களுடைய உணவுவகைகளையும் தற்போது உண்கின்றனர்.

     இந்த உணவுப் பழக்கம் ஜெர்மனியில் வாழுகின்ற தமிழ் மக்களிடம் கலந்திருக்கின்றது. காலை உணவுக்கு எமது நாடுகள் போல் இடியப்பம், பிட்டு, இட்லி, தோசை எல்லாம் உண்ணுகின்ற வழக்கம் எம்மவரிடம் இல்லை. ஜெர்மனியர்கள் போலவே பாண், தானியவகைகள் போன்றவற்றைக் காலை உணவாக உண்ணுகின்றார்கள். எமது அரிசி உணவை மதியம், இரவில் உண்கின்றார்கள். ஆனால், இளைய தலைமுறையினர் கூடுதலாக ஜெர்மனிய, அல்லது ஜெர்மனியில் வாழும் வேற்று நாட்டவர்களுடைய உணவுப் பண்பாட்டையே பின்பற்றுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது.

     

    குடிவகைகள்:

     

    ஜெர்மனிய மக்கள் விரும்பிக் குடிப்பது பியர். 300 வகையான பியர்வகைகள்  ஜெர்மனியில் இருக்கின்றன. அதிகமான மக்கள் நாம் தேநீர் அருந்துவது போல் கோப்பியே அருந்துவார்கள். பெண்களும் ஆண்களுமாக ஒரு மனிதன் வருடத்திற்கு அண்ணளவாக 150 லீட்டர் பியர் அருந்துவார்கள். 18 வயதுக்கு மேற்பட்ட 10 வீதமான மக்கள் மதுப்பழக்கம் மிக்கவராக உள்ளார்கள். 18 வயதுக்குப்பின் ஆணும் பெண்ணும் மது அருந்துவது இங்குள்ள பண்பாடாகவே கருதப்படுகின்றது. ஆனால், என்னுடைய அனுபவத்தில் கண்டிருக்கின்றேன். இளவயதிலே மதுக் குடிக்கும் ஆண்,பெண்கள் வயதாகி தமக்குரிய குடும்பம் தொழில் என்று வருகின்ற போது அநேகமான ஜெர்மனியர் மது குடித்தாலும் அதில் பெரிய  நாட்டமின்றி விசேட நாட்களில் அல்லது விரும்பிய போது வீட்டில் ஏதாவது விசேடம், விழாக்களில் மட்டும் அளவோடு பண்பாகக் குடிப்பதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. இதில் எம்முடைய இளைய தலைமுறையினரை நாம் இனங்கண்டு கொள்ள முடியாது உள்ளது. ஆயினும், இப் பண்பாடு கலப்பது தவிர்க்க முடியாததாகவே உள்ளது.

     

    விழாக்கள்:

     

    ஜெர்மனியில் Schützenfest> Jahrmakt, Christmasfest, Bierfest, Weinfest,   Bayern Bierfest oktober fest,  ஒவ்வொரு வருடமும் மில்லியன் மனிதர்கள் 1000 சதுர மீற்றரில் சேருகின்ற ஒரு விழாவாக müngstener oktober fest போன்றன அமைகின்றன. மில்லியன் மக்கள் வருகின்ற Hamburger Hafen fest, karnival fest,  Ostern போன்ற விழாக்களும் நடைபெறுகின்றன. இக்கொண்டாட்டங்களில் எமது இனத்தினரும் தம்முடைய கொண்டாட்டம் போன்றே கலந்து கொண்டாடுவதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. கார்னிவேல் கொண்டாட்டங்களில் எம்மவர் பலவிதமான ஆடைகள் அணிந்து இவ்விழாவிற்குச் சமுகமளிப்பார்கள். எம்முடைய பண்டிகை நாட்களில் விடுமறை இல்லாத காரணத்தினால், எம்முடைய விழாக்கள், வேலைக்குப் போகாது, பாடசாலைகளுக்குப் போகாது வீட்டில் இருப்பவர்களுக்கே சாத்தியப்படுகின்றது. முடிந்தவரை வசதிகள் கிடைக்கும் பட்சத்தில் எம்முடைய பண்பாட்டு விழாக்களை தமிழர் கொண்டாடுகின்றார்கள். ஆனால், கிறிஸ்மஸ் பண்டிகையை எம்முடைய எல்லா மதத்தினரும் கொண்டாடுகின்றார்கள். ஏனென்றால், இக்காலப்பகுதி விடுமுறையாக இருப்பதனாலும் பிள்ளைகள் தாம் கல்வி கற்கும் பிள்ளைகள் கொண்டாடுகின்ற விழா என்னும் ஈர்ப்பினாலும் எல்லாரும் கொண்டாடப்படும் விழாவாக கணிக்கப்படுகின்றது. இது ஜெர்மனிப் பண்பாட்டு அம்சங்களைத் தமிழர்கள் ஏற்றுக் கொள்ளும் ஒருவிடயமாகக் காணப்படுகின்றது.

     

    ஆடை

     

    ஜெர்மனிய மக்கள் எந்த ஆடையையும் அணிவார்கள். ஆடைக்கு இங்கு எந்தவித சட்டமும் இல்லை. பாடசாலை பிள்ளைகளுக்குக் கூட சீருடை இல்லை. ஆனால், குறிப்பாக ஜெர்மனியில் உலகம் முழுவதும் போல் ஆண்கள் கோர்ட் கழுத்துப்பட்டி அணிவார்கள். பெண்களுக்கு விதம்விதமான ஆடைகள் இருக்கின்றன. பாவாடை, சட்டை, மேல்சட்டை, இதுபோன்று பலவிதமான ஆடைகள் அணிவார்கள். ஜெர்மனியில் பிராந்திய ரீதியாக ஆடைகள் வித்தியாசப்படுகின்றன. தெற்கு ஜேர்மனி உதாரணமாக Bayern நகரத்தில் பெண்கள் அழகான வித்தியாசமான ஆடைகளை அணிவார்கள். ஏதாவது விழாக்களில் அல்லது கிறிஸ்தவ ஆலயங்களுக்குச் செல்வதற்கு இவ் ஆடைகளை அணிவார்கள். ஆண்கள் லெதர் காற்சட்டையும் வித்தியாசமான மேலணியும் அதன் மேல் வெஸ்ட் உம் தொப்பியும் அணிவார்கள். schwarz wald என்று சொல்லப்படுகின்ற இடத்தில் வித்தியாசமான தொப்பி அணிவார்கள் தொப்பியில் பந்துகள் போல் அலங்கரிக்கப்பட்டிருக்கும். இந்தப் பகுதியில் வாழுகின்ற எமது மக்களும் இவ் ஆடைகளை அணிவார்கள். எமது சேலை, வேட்டி ஆடைகளை எமது விழாக்களுக்கும், ஆலயங்களுக்கும் அணிந்து செல்வதை எம்மவர் பழக்கமாகக் கொண்டுள்ளார்கள். ஆனால், நாளாந்தமான அணியும் ஆடைகளாக ஜெர்மனியர் அணியும் காற்சட்டை, மேலணி அணிய வேண்டிய அவசியம் தமிழ் மக்களுக்கும் இருக்கின்றது. காலநிலை பண்பாட்டைத் தீர்மானிக்கின்றது என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது. வருடத்தில் கூடுதலான காலப்பகுதி குளிர் காலமாக இருப்பதனால், காலத்துக்கேற்ப ஜெர்மனிய ஆடைப் பண்பாடு தமிழர்களுக்கு இலகுவானதாக அமைகின்றது.

     

    இங்கு அதிகமான தமிழ் பெண்களிடம் குங்குமப் பொட்டு வைக்கும் பண்பாட்டுக் கூறு இல்லை. ஏனென்றால், நெற்றியில் பொட்டைக் காணும் ஜெர்மனியர்கள் என்ன நெற்றியில் அடையாளம் என்று கேட்பதாகவும் அது தமக்கு இடையூறாக இருப்பதாகவும் கூறும் பெண்கள் அப் பொட்டு வைப்பதைத் தவிர்க்கின்றார்கள். இதனால் திருமணமான பெண்களையோ திருமணமாகாத பெண்களையோ அடையாளம் காணமுடியாது பொட்டு வைக்கும் பண்பாடு அழிந்து போகின்றது.

     

    தொழில்:

     

    இங்கு நிலக்கரி, இரும்பு அதிகம் இருப்பதனால், அதனோடு சம்பந்தப்பட்ட தொழில்கள் அதிகம் உண்டு. கார் உற்பத்தி முக்கயமாகக் கருதப்படுகின்றது. பல்கலைக்கழகக் கல்வி முடித்துப் பணிபுரிபவர்கள், தொழில் முறைக்கல்வி கற்று பணிபுரிபவர்கள் என  எம்மினத்தவர்கள் தற்போது ஜெர்மனியருக்கு நிகராக தொழில் புரிகின்ற நிலைமை ஏற்படுகின்றது. இந்நிலையில் தமிழர்கள் ஜெர்மனிய சட்டதிட்டங்களுக்கு ஏற்ப பழக்கப்பட்டவர்களாகக் காணப்படுகின்றார்கள். தாயகத்தில் சாதி வேறுபாடுகளால், சில தொழில்களைச் செய்யாத தமிழர்கள், ஜெர்மனியில் எல்லாவற்றையும் செய்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. உதாரணமாக கோயிலில் பூசை செய்த ஒருவர் ஜெர்மனிய உணவகத்தில் வேலை செய்கின்றார். உயர் சாதி எனத் தன்னை அடையாளப்படுத்திய ஒருவர் சுடலையிலே தொழில் புரிகின்றார். இவ்வாறு புலம்பெயர்வு தமிழர் பண்பாட்டில் சாதி ஏற்றத்தாழ்வுகளை நீக்கியுள்ள நன்மைகளும் பல காணப்படுகின்றன. அத்துடன் தொழில் ரீதியாக உயர்தொழில், தாழ்வான தொழில் என்ற வேறுபாடுகள் இன்றி எந்தத் தொழி;ல் புரிபவர்களும் சமமாக மதிக்கின்ற தன்மை ஜெர்மனியில் காணாப்படுகின்றது. உதாரணமாக ஒரு டாக்டர் நோயாளியை தன்னுடைய இடத்தில் இருந்து எழுந்து வந்து அழைத்துச் செல்லுகின்ற பண்பாடு ஜெர்மனியில் இருக்கின்றது.

     

    சமய வழிபாடுகள்:

     

    ஜெர்மனியில் புரட்டஸ்தாந்து, கத்தோலிக்க மதத்தவர்கள் வாழுகின்றார்கள். ஒவ்வொரு ஞாயிற்றுக் கிழமையும் தேவாலயங்களுக்குச் செல்லுகின்ற வழக்கத்தைக் கொண்டுள்ளார்கள். ஆனால், இளந்தலைமுறையினரிடம் இந்த வழக்கம் குறைவடைந்துள்ளது. எந்தவித மதமும் இல்லாதவர்களும் ஜெர்மனியில் காணப்படுகின்றார்கள். தமிழர்கள் தாயகத்தில் மதவழிபாடுகள், விரதங்கள் மேற்காண்டவர்கள் இங்கும் தொடர்வதைக் காணக்கூடியதாக இருக்கின்றது. ஆரம்பத்தில் தொடர்மாடிக் கட்டிடத்தின் நிலவறையில் சுவாமி படங்கள் வைத்து வணங்கி, கோயில்களாக்கி கடவுளை வணங்கியவர்கள், தற்போது பெரிய கோபுரங்களுடன் கோயில் கட்டி வழிபாடு நடத்துகின்ற நிலைக்கு முன்னேறியுள்ளார்கள். இதேவேளை தாயகத்தில் பூசை, வழிபாட்டுடன் வாழ்ந்த மக்கள் ஜெர்மனிக்குப் புலம்பெயர்ந்து இவற்றையெல்லாம் மறந்து வாழுகின்ற நிலைமையும் காணப்படுகின்றது. நண்பர்களை உறவினர்களைச் சந்திப்பதற்காக கோயில்களுக்குச் செல்லுகின்ற தமிழர்கள் இப்போது அதிகமாகக் காணப்படுகின்றார்கள். தாயகத்தில் கால் கழுவிக் கோயிலுக்குள் போகின்ற பண்பாடு எல்லாம் இங்கு கடைப்பிடிக்க முடியாதுள்ளது. காரணம் காலநிலை. இவ்வாறான வழிபாட்டு மாற்றங்களும் இங்கு காணப்படுகின்றன. 

     

    முடிவாக இங்கு வாழுகின்ற தமிழ் இளையவர்கள் சிறுவர்கள் புலம்பெயர் மக்களுடன் தொடர்பு கொள்வதிலுள்ள இலகுத் தன்மையும் பண்பனுபவமும் நமது மக்களிடம் கிடைப்பதில்லை. ஆசிரியர் தொட்டு வைத்தியர் வரையுள்ள அந்நியோன்யப் போக்கு எம்மவருடன் பழகுவதில் எமது தலைமுறையினருக்குக் கிடைப்பதில்லை. மதிப்பு என்ற பெயரில் கண்டிப்பும், வரதட்சணை, தாலிகட்டல் என்ற பெயரில் பெண் அடக்குமுறையும் எமது கலாசாரத்தில் எம் இளஞ்சந்ததியினருக்கு வெறுப்பை ஏற்படுத்துகின்றது. இதுவே இலகுவாக நட்புரிமையுடன் பழகக் கூடிய புலம்பெயர் பண்பாட்டில் விருப்பை ஏற்படுத்துகின்றது.

     

    இன்று இளஞ்சந்ததியினரிடம் அடித்தளமாய்க் காணப்படுவது மொழிக்கல்வி, அறிவு, பொது அறிவு, மனவளர்ச்சி, வாழ்க்கை வசதி போன்றவையே. இவற்றில் நாட்டம் கொள்கையிலே பண்பாடு தவறிவிடுகின்றது. முற்றுமுழுதாக அந்நிய கலாசாரத்தின் மத்தியில் வாழும் எமது இளந்தலைமுறையினர் பெரும் இக்கட்டான சூழ்நிலையிலே தமது வாழ்க்கையை நடத்திக் கொண்டிருக்கின்றார்கள். அவர்களைக் குறை கூறமுடியாத நிலையில் நாம் இருக்கின்றோம். நாம் முற்றுமுழுதாக தமிழர் பண்பாடு, தமிழ்மொழி, தமிழ் உறவினர் என்று ஒன்றாக வாழ்ந்தோம். ஆனால், எங்கள் பிள்ளைகள் அப்படியல்ல. முழுக்கமுழுக்க அந்நிய பண்பாட்டில் பல்வேறுபட்ட கலப்புச் சூழலில் தம் வாழ்க்கையைக் கொண்டு செல்கின்றனர். வாழ்நாள் முழுவதும் எம்முடைய பண்பாட்டுடன் பழகிய எமது வாழ்க்கை வேறு. ஓரிரு நிகழ்ச்சிகளில் மட்டும் எம்முடைய பண்பாட்டைக் கண்டு கலந்து வாழும் எங்கள் பிள்ளைகளின் நிலை வேறு. எனவே அவர்கள் மனநிலையைப் புரிந்து விட்டுக் கொடுக்க வேண்டிய இடத்தில் விட்டுக் கொடுத்து, அவர்கள் அருகிருந்து நாட்டைக்கற்று, சூழலைக்கற்று, நமது எதிர்கால சந்ததியினரை எமது பண்பாட்டுடன் வாழவைத்து, அவர் தம் பெருமையினை உலகறியச் செய்ய வேண்டிய பெரும்பணி பெற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பம் எம்மால் முடியாது என பெற்றோர் ஒதுங்கும் பொழுது பிள்ளைகள் குறைநிறைகளை அவதானிக்க முடியாமல் போகின்றது. நல்ல ஒரு சமுதாயத்தை நல்ல ஒரு பண்பாட்டைப் புலம்பெயர்வில் கட்டிக்காக்க முடியாது போன பெரும் பழி பெற்றோர்களிடம் வந்து சேர்கின்றது.

     

    அங்கஅசைவுகள், ஜெர்மனிய மொழி  பேசுகின்ற தன்மை, நடைஉடை பாவனை, பழக்கவழக்கங்கள், திருமண நடைமுறைகள், உணவு உண்ணும் முறைகள், விருந்துபசாரம், தொழில்முறை என்பது போன்ற அனைத்திலும் ஜெர்மனியரைப் போலவே தமிழ் சமூகம் மாறிவருவது தவிர்க்க முடியாதுள்ளது என்று கூறி இந்த சந்தர்ப்பத்தை வழங்கிய அண்ணாநகர் தமிழ்ச்சங்கத்திற்கு நன்றி கூறி விடைபெறுகின்றேன். நன்றி வணக்கம்

     

     

    ஜெர்மனியில் தமிழர் பண்பாட்டு மாற்றம்

      ஆங்கிலேயர் , போத்துக்கேயர்கள், ஒல்லாந்தர்  தமது ஆட்சிக் காலத்தின் போது எமது நாடுகளில் தம்முடைய பண்பாட்டைக் கட்டாயமாகத் திணித்த நிலையிலிர...