• நுழைவாயிலில்
  • என் அகம்
  • கட்டுரைகள்
  • இலக்கியங்கள்
  • வாழ்த்துக்கள்
  • விமர்சனங்கள்
  • சிறப்பு
  • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

    சனி, 7 ஜனவரி, 2023

    உண்மை நட்பை இலக்கியங்களில் மட்டுமே காண முடியும்




    மனித வாழ்க்கையிலே உள்ள உறவுமுறைகளிலே நட்பு என்னும் உறவே மிதமாகப் பேசப்படுகின்றது. பெற்றோரிடம் மனைவியிடம் கூறத் தயங்கும் விடயங்களைத் துணிந்து நண்பர்களிடம் உரைக்கின்ற வழக்கம் பரந்த உலகம் முழுவதிலும் அனைத்து மனித வர்க்கத்திடமும் இருக்கின்றது. நண்பன் தனக்காக எதையும் விட்டுக் கொடுப்பான் தன்னுடைய உயிரையும் தருவான். தன்னுடைய இரகசியத்தைக் காப்பாற்றுவான் என்னும் நம்பிக்கைகள் இருந்து வருகின்றது. இந்த வழக்கம் தற்காலத்தில் போற்றிப் பாதுகாக்கப்படுகின்றதா என்பதும் இலக்கியத்தில் நட்பு எவ்வாறு கொண்டாடப்பட்டது என்பதும் ஆராயப் புகுந்தால் கால மாற்றத்திற்கேற்ப இலத்திரனியல் உலகில் மனங்கள் அந்தப் பண்புகளை மறந்து விடுகின்றார்கள் என்பதே உண்மை. இலக்கியத்தில் உண்மை நட்பு இருக்கின்றது. ஆனால், நடைமுறை வாழ்க்கையில் இருக்கின்றதா என்றால் அது இருக்கின்றது ஆனால், கேள்விக்குறியாகவே இருக்கின்றது 

    தளபதி திரைப் படத்திலே பாசம் வைக்க நேசம் வைக்கத் தோழன் உண்டு வாழ வைக்க, அவனைத் தவிர உறவுக்காரன் யாரும் இங்கில்லே. உள்ள மட்டும் நானே, உசிரைக் கூடத்தானே என் நண்பன் கேட்டால்  வாங்கிக்கன்னு சொல்லுவேன். நட்பைக்கூடக் கற்பைப் போல எண்ணுவேன். என்னும் பாடலாசிரியர் வாலி அவர்களின்; வரிகளிலே நண்பன் என்பவன் இப்படித்தான் இருக்க வேண்டும் என்பதை மனதிலே கொண்டு வந்து பதிக்கின்றார். நட்பாலே நெஞ்சைத் தைத்து, ஒரு விழி அழ மறுவிழியாய் அழுத நட்புக்களும், ஒரு பருக்கைச் சோறும் தட்டில் இல்லாது வழித்து வழித்து உணவுண்டு, விரல்கள் வறண்டு போகும் வரை பேசிப் பேசிச் சிரித்து ஆட்டம் போட்ட நட்புகள்  போன இடம் இன்று தெரியவில்லை. அந்தநாள் ஞாபகம் நெஞ்சிலே வந்து நண்பர்களின் இறுக்கத்தை நினைத்து ஏங்க வைக்கும் காலமாக இக்காலம் விளங்குகிறது. 

    இன்பத்திலும் துன்பத்திலும் அருகிலே இருக்கும் ஒரு உறவு நட்புறவு. அந்த  நட்புக்கு இலக்கணம் வகுக்கும் வள்ளுவர் ஆடை விழுகின்ற போது ஓடிச் சென்று அந்த ஆடையைப் பற்றுகின்ற கைகளைப் போல நண்பர்கள் இருக்க வேண்டும் என்கிறார். நட்பின் முக்கியத்துவம் கருதி நட்பு, நட்பு ஆராய்தல், தீ நட்பு, கூடா நட்பு பழைமை என்று 5 அதிகாரங்களுக்குள் அறிவுரைகளை அள்ளிக் கொட்டியிருக்கின்றார். அக்காலத்திலும் இக்காலத்து நட்புப் போல் அதிகமாக இருந்திருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது. அறிவுக்கும் நட்புக்கும் நெருங்கிய தொடர்பு இருக்கிறது. அறிவுடையவர்களுடைய உறவு வளர்பிறையைப் போல வளர்ந்து கொண்டே போகும். நாளும் நல்ல செய்திகளையும் அறிவுப் பரிமாற்றங்களையும் செய்கின்ற போது அதன் வளர்ச்சி பல்கிப் பெருகும். ஆனால், பேதையர் நட்பு தேய்ந்து போய் நின்று விடுவதை இலக்கியக் கூற்றாக மட்டுமன்றி இன்றும் அவதானிக்க கூடியதாக இருக்கின்றது. 

    நட்பின் இலக்கணம் கூற விழைந்த ஒளவையாரும் குளம் வற்றி நீரின்றி கவலையுடன் இருக்கும் குளத்தை ஒட்டி உறவாடிய பறவைகள் நாடி வருவதில்லை. அதே போல உண்மை நண்பன் என்று உறவாடிய நண்பர்கள், தேவையில்லை என்று அறிந்தவுடன் விலகிச் செல்வதை உண்மை நட்பின் இலக்கணம் இல்லை என்று ஒளவை எடுத்துரைக்கின்றார்.  ஆனால், அக்குளத்தினுடனே இருந்து கொடிகளும், ஆம்பலும், நெய்தலும்,  வாடி வதங்கும் அவ்வாறுதான் உண்மை நட்பு என்றும் கூடவே இருக்கும்.  என்று  நட்புப் பற்றி ஒளவையார் கூறுகின்றார். 

    கடையாயார் நட்பிற் கமுகனையார்; ஏனை

    இடையாயார் தெங்கின் அனையர் தலையாயார்

    எண்ணரும் பெண்ணை போன்று இட்டஞான்று

    இட்டதே  தொன்மையுடையார் தொட

    என நாலடியார் 3 வகையான நண்பர்களை எமக்கு இனம் காட்டுகிறார். பாக்கு மரத்துக்கு தண்ணீர் விட்டுக்கொண்டே இருக்க வேண்டும். எப்போதும் உதவி செய்து கொண்டே இருக்க வேண்டும். அவ்வாறான நட்புக்கு உதவி பண உதவி மாத்திரமல்ல என்பதே இங்கு எடுத்துக் காட்டவேண்டிய விடயமாக இருக்கின்றது. எப்போதும் உதவி கேட்டு நீதான் உலகத்திலேயே சிறந்த நண்பன் என்பவர்கள். ஒருநாள் கிடைக்கவில்லை என்றால், அக்காலத்தில் ஊர் முழுவதும் ஆனால், இக்காலத்தில் உலகம் முழுவதும் மூடாத வாயாக வட்சப் அழைப்பு தொடர்ந்து கொண்டேயிருக்கும். வசை புராணம் பாடி அடுத்தவர்களிடம் அந்த நபரில் இருந்த நன்மதிப்பைப் பிடிங்கி எடுத்துவிடுவார்கள். ஆனால், தென்னைமரம் தினமும் இல்லாவிட்டாலும் அடிக்கடி நீர் விட்டால் தன்னை எம்மோடு இணைத்து வைத்துக் கொள்ளும். ஆனால் பனை இருக்கிறதே விதையிடும் போது நீர் விட்டால் போதும் அந்த அடிப்படை அறிவை வைத்துக் கொண்டு காலம் முழுவதும் தானாக நீர் பெற்றுப் பயனைத் தரும்.  முதன்முதல் கண்டபோது ஏற்பட்ட உணர்வு எவ்வித எதிர்பார்ப்புக்களும் இல்லாமல் காலம் முழுவதும் புத்தம் புது மலர் போல மலர்ந்து கொண்டே இருக்கும். இவ்வாறான நட்பைப் பெறுவது அரிது. பெற்றால் பிரிவது அரிது. மனதால் தேடுவதும் தற்காலத்தில் தேடிக் கிடைக்காததும் இவ்வாறான நட்பே ஆகும்.  

    இலக்கிய காலத்திலே ஒளையார் அதியமான், கர்ணன் துரியோதனன், கோப்பருஞ்சோழன் பிசிராந்தையார், பாரி கபிலர் போன்றோர் நட்பை இலக்கியங்களிலே மன்னனுக்கும் புலவர்களுக்கும் இடையிலே இருந்த சிறப்பினை நாம் அறிந்திக்கின்றோம். அதேபோல், மணிமேகலைக்கு சுதமதியும், மாதவிக்கு வசந் மாலையும், கண்ணகிக்கு தேவந்தியும் காப்பியத் தோழிகளாக இருந்தனர். சங்ககாலப் பாடல்களிலே குடிமக்களிடத்தில் தோழமை உறவை எடுத்துப் பார்க்கும் போது தலைவிக்கும்  தலைவனுக்கும் இடையிலே ஏற்படும் கற்பொழுக்கம், களவொழுக்கம் ஆகிய இரண்டிலும் தோழியின் பங்கு அளப்பெரியது. தோழி என்பவள் தலைவியின் வளர்ப்புத்தாயாகிய செவிலித்தாயின் மகளே ஆவாள். சிறுவயதில் இருந்து ஒன்றாகவே வளருகின்றார்கள். தலைவனுடன் தலைவி காதல் வசப்படுகின்ற போது அக்காதலுக்குத் தூதாக வருபவளும், தலைவியின் குரலாக இருப்பவளும் தோழியே. அவளுக்கு நேர்மையாகவும், கண்டிப்பாகவும்,  அறிவுரை போதிப்பவளும் அவளே. தலைவனுடைய செயல்களை எப்போதுமே சந்தேகக் கண் கொண்டே நோக்குவாள். தலைவனும் தலைவியும் திருமணம் செய்து வாழுகின்ற கற்பொழுக்கத்திலே பரத்தையர் வழிப்பிரிந்த தலைவனுக்கு தலைவியோடு இணைந்து வாழவேண்டும் என்று அறிவுரை கூறுபவளும் தலைவன் தலைவியரிடையே ஏற்படும் ஊடலைத் தீர்த்து வைப்பவளும் அவளே. 

    ஆனால், தற்காலத்திலே தூது போன தோழி தலைவனைத் தன் வயப்படுத்தி தலைவியைப் பிரியச் செய்கின்ற செயல்களையும், தோழியிடம் நல்லவர் போல் நடித்து அவளுடைய நல்லெண்ணம் கொண்டவர்களிடம் அவளைப் பற்றி அவதூறு பேசுகின்ற தோழமையும் இலத்திரனியல் காலத்தில் நடைமுறை வாழ்க்கையில் மிதமிஞ்சியே காணப்படுகின்றன. உறவுகளிலே போலி என்ற வார்த்தையில்  நட்பு என்ற உறவே முன்னிலை வகிக்கின்றது. கூடவே இருந்து குழி பறிக்கின்ற குணத்துடனே கைகொடுக்கும் போது எதிர்மறை ஆற்றலைச்(நேபயவiஎந நுநெசபல) செலுத்தி விடக்கூடிய தன்மையும் நண்பர்களுக்கு உண்டு. அதனாலேயே தமிழர்கள் எச்சரிக்கையாக கைகூப்பி வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்வார்கள். எனவே யார் உங்களுக்கு வணக்கம் தெரிவிக்கின்றார்களோ அவர்கள் உங்களிடம் எச்சரிக்கையாக இருக்கின்றார்கள் என்று அறியக் கூடியதாக இருக்கும். உன் பிள்ளை மருத்துவராகி விட்டானா? உன் பிள்ளைக்கு நல்ல மாப்பிள்ளை கிடைத்து விட்டானா? நீ நல்ல வாகனம் புதிதாக வாங்கி விட்டாயா? உனக்குச் சம்பளம் இந்த வேலையில் அதிகமாகக் கிடைக்கின்றதா? நீ வருடா வருடம் சுற்றுலா போகின்றாயா? நீ இவ்வளவு காலமும் தொடர்ச்சியாக இந்த முயற்சியில் ஈடுபட்டிருக்கின்றாயா? நானும் அதைச் செய்ய வேண்டும். என்னால் முடியுமோ முடியாதோ வரிந்து கட்டிக் கொண்டு குழப்பியடிக்க முயற்சிப்பேன்.; இப்படி அடுக்கிக் கொண்டு போகும் பொறாமை நட்புக்கள் மனதுக்குள் புழுங்கி வெளியிலே பற்களைக் காட்டிச் சிரிக்கும். எங்களைக் கட்டி அணைத்துக் கைகொடுத்து சிறப்பு, வாழ்த்துகள் என்று சொல்லும். அதனால், நம்பிக் கெடும் கோமாளிகளாக யாரும் இருக்கக் கூடாது. சிலருக்கு ஒரு சூடு. ஆனால், பலரும் சூடு வாங்கிக் கொண்டு ஏமாந்து கொண்டு வருந்துகின்றார்கள். அவர்களிடம் அவதானம் தேவை. புலம்பெயர்ந்த வாழ்க்கையில் எல்லாம் கிடைக்கின்றது. ஆனால், எப்படிக் கிடைக்கின்றது என்பதே முக்கியம். எல்லாராலும் எதையும் செய்ய முடியும். ஆனால், எப்படிச் செய்கின்றார்கள் என்பதே முக்கியம். அதனால், அவதானத்தை கைக் கொண்டு ஓடும் புளியம் பழமும் போல் வாழ்வதுதான் இக்காலத்துக்கு உரியதாக இருக்கும் என்று நினைக்கத் தோன்றுகிறது. இவ்வாறான நட்புகளுக்கு மத்தியில் எம்முடைய நெஞ்சைத் தம்முடன் இணைத்துத் தைத்துத் தொடரும் நட்புக்களும் இருக்கவே செய்கின்றன. அவர்களை காலம் இனங்காட்டிக்கொண்டே இருக்கும். 

    எனவே நாம் உண்மை நட்பை இலக்கியங்களில் மட்டுமே அன்றி நிஜத்திலும் கண்டிப்பாகக் காணலாம். 



    உள்ளத்தின் குரல் - பிரேம் ராவத்

      உள்ளத்தின் குரல் ஆசிரியர்:   பிரேம் ராவத் வெளியீடு: 2024 12 அத்தியாயங்களில் 357 பக்கங்கள்   இரைச்சல் மிகுந்த உலகத்தில் நிம்மதியை...