• நுழைவாயிலில்
 • என் அகம்
 • கட்டுரைகள்
 • இலக்கியங்கள்
 • வாழ்த்துக்கள்
 • விமர்சனங்கள்
 • சிறப்பு
 • வணக்கம் எனது படைப்புக்கள் உங்களை வரவேற்கிறது . வாசித்து உங்கள் எண்ணங்களை இதில் பதிவிடுங்கள்

  திங்கள், 25 அக்டோபர், 2021

  மிருகளும் பறவைகளும் பல நேரங்களில் மனிதனைவிட உயர்வானவை.

   


  மனிதன் மட்டுமே அறிவார்ந்த பிறவி என்று எம்மில் பலர் நினைத்திருக்கின்றோம். விலங்குகள், பறவைகள் தமக்கென கொள்கை, அறிவார்ந்த தன்மைகள் கொண்டுள்ளன. Olympian Bat என்று சொல்லப்படும் வெளவாள்கள் பிரித்தானியாவில் இருந்து ரஷ்யாவுக்கு 2018 கிலோ மீற்றர் பறந்து போயிருக்கின்றதாம். இவை காலநிலை பாரிய மாற்றத்தை ஏற்படுத்தப் போகின்றன என அறிவியலாளர்கள் எடுத்துரைக்கின்றார்கள். ஒரு பறவை மனிதன், விலங்குகளுடைய தலைமயிரை எடுத்து பிறக்கப் போகும்  குஞ்சுக்காக கூடு கட்டுகின்றது. பஞ்சுமெத்தை தேடிக் குஞ்சுக்குப் பஞ்சணை அமைக்கின்றது.  இதேபோல் புலி இறந்த உடலை உண்ணாது. பசித்தாலும் புல்லைத் தின்னாது. யானை பசித்தாலும் மாமிசம் உண்ணாது. சிங்கம் தன் பசிக்கு மேலதிகமாக வேட்டையாடிய மிருகத்தை உண்ணாது. மிகுதியை அப்படியே விட்டுவிட்டுப் போய்விடும். ஆனால், புலி வேட்டையாடி கொன்ற தன்னுடைய இரையை இழுத்துச் சென்று தன்னுடைய குகையில் வைத்திருந்து அழுகிப் புழுத்துப் போனாலும் திரும்பத் திரும்ப அதை உண்ணும். 


  “ஆடுகழை நரலும் அணங்குடைக் கவாஅன்

   ஈருயிர்ப் பிணவின் வயவுப்பசி களைஇய

   இருங்களி றட்ட பெருஞ்சின உழுவை

   நாம நல்லராக்  கதிர்பட உமிழ்ந்த

   மேய்மணி விளக்கின் புலர ஈர்க்கும்

   வாள்நடந் தன்ன வழக்கருங் கவலை

   உள்ளுநர் உட்கும் கல்லடர்ச் சிறுநெறி”   


  என்னும் அகநானூற்று 72 ஆவது பாடல் தெளிவுபடுத்துகின்றது.


  இவ்வாறு பண்புகள் கொண்ட உயிரினங்களை இலக்கியங்கள் மிகச் சிறப்பாகக் கையாண்டிருக்கின்றன. புலவர்கள் தாம் எடுத்துக் கொண்ட பொருளை விளக்குவதற்கு உவமையாக பிற பொருளை எடுத்துக் காட்டுவது வழக்கம். அவற்றில் பல இரசனைகளும், அறிவியல், தகவல்களும் காணக்கிடக்கின்றன. 


  சங்க காலப் புலவர்களில் ஒருவர் சத்திமுத்தப் புலவர்;. சத்திமுத்தம் என்னும் ஊரில் பிறந்தவர். இவர் வறுமையால் தளர்வுற்று பாண்டியமன்னனை கண்டு அவரைப் புகழ்ந்து பாடிப் பரிசு பெற மதுரைக்கு வந்தார். வருகின்ற வழியிலே குளத்தங்கரையில் குளிரில் வாடிக் கொண்டிருந்தபோது நாரை ஒன்று மேலே பறக்கக் கண்டு, வறுமையிலும் தன் பிரிவாலும் வருந்திக் கொண்டிருக்கும் தன் மனைவிக்கு அதைத் தூதாக அனுப்புவது போல இப்பாடலைப் பாடுகின்றார். இப்பாடல் சங்கப்பாடல்களில் புறநானூற்றுத் தொகுப்பிலே காணக்கிடக்கிறது. 


  “நாராய் நாராய் செங்கால் நாராய்

  பழம்படு பனையின் கிழங்கு பிளந்தன்ன

  பவளக் கூர்வாய் செங்கால் நாராய்

  நீயும் நின் பெடையும், தென் திசைக் குமரியாடி

  வடதிசைக்கு ஏகுவீராயின்

  எம்மூர் சத்திமுத்த வாவியுள் தங்கி

  நனைசுவர் கூரை கனைகுரல் பல்லி

  பாடு பாத்திருக்கும் எம் மனைவியைக் கண்டு

  எங்கோன் மாறன் வழுதிக் கூடலில்

  ஆடையின்றி வாடையில் மெலிந்து

  கையது கொண்டு மெய்யது பொத்தி

  காலது கொண்டு மேலது தழீஇப்

  பேழையில் இருக்கும் பாம்பென உயிர்க்கும்

  ஏழையாளனைக் கண்டனம் எனுமே”  முதலிலே ஒரு ஏவல் செய்ய வேண்டும் என்றால், அவர்களை புகழ்ந்து தள்ள வேண்டும். அந்தப் பாணியிலேயே நாரைக் கொக்கின் வாய் பனங்கிழங்கைப் போன்று நுனிப்பகுதி கூராக இருக்கின்றதாகவும் பவளம் போன்ற நிறத்தில் இருப்பதாகவும், கால்கள் சிவந்த நிறத்தில் அழகு செய்வதாகவும் புகழ்ந்து தள்ளுகின்றார். அதன் பின் நீ போகின்ற பாதை தானே என்பது போலவும் திருத்தல யாத்திரை செல்பவர்கள் தம்முடைய மனைவியுடன் தெப்பக் குளங்களிலே நீராடிச் செல்வது வழக்கம். அதனால், நீ உன் மனைவியுடன் தென் திசையில் உள்ள கன்னியாகுமரியில் நீராடிய பின் வட திசைக்கு வந்து காசி விஸ்வநாதரையும் விசாலாட்சி அம்மையாரையும் வணங்கி தலயாத்திரை முடிக்கும் சமயத்திலே திரும்பும் போது மதுரையில் மழைநீர் வடிந்த ஓலை வீட்டுச் சுவரிலே பல்லி எப்போது நல்ல செய்தி சொல்லும் என்று காத்துக் கிடக்கின்ற என் மனைவியிடம் ஆடை இல்லாமல் வாடைக்காற்றிலே மெலிந்து கைகளால் உடம்பைப் பற்றிக் கொண்டு கால்களால் உடலைத் தழுவியபடி பெட்டிக்குள் பிடித்து வைத்திருக்கும் பாம்பை போல உயிரை பிடித்து வைத்திருக்கும் உன் ஏழைக் கணவனை கண்டோம் என்று சொல்லுங்கள். என நாரையைத் தூது அனுப்புவதாக இப்பாடல் வருகின்றது. 


  பல்லி சொல்லுதல் நல்ல சகுனம் என்பது தமிழர்கள் நம்பிக்கை. இந்நம்பிக்கையையும், நாரை நீண்ட தூரப் பயணம் செய்யும் என்னும் செய்தியையும், சிறிய துளையூடாக பார்வையைச் செலுத்தக்கூடிய திறனை நாரைக் கொக்கு பெற்றிருக்கின்றது என்னும் அறிவியல் உண்மையையும் இப்பாடல் மூலம் பெற்றுக் கொள்ளக் கூடியதாக இருக்கின்றது.  இதனாலேயே வீட்டினுள் கூரையைப் பார்த்திருக்கும் தன் மனைவியை இந்நாரை கண்டு கொள்ளும், இச்செய்தியைக் கொண்டு சொல்லும் என்று தூதாக நாரையை சத்திமுத்தப் புலவர் அனுப்புகின்றார்.

  குறிஞ்சி நிலத்திலே விலங்காக குரங்கும், பறவையாக மயிலும். முல்லைநிலத்திலே விலங்காக கரடி, முயல் போன்றனவும், பறவையாகக் கிளியும். மருத நிலத்து விலங்காக எருமை பறவையாக நாரை, நெய்தல் நிலத்து மீன், கடற்காகம், பாலை நிலத்து யானை, கழுகு போன்ற உயிரினங்களை வகைப்படுத்திய பாடல்களை நாம் காணக்கூடியதாக இருக்கின்றன. இதேபோல சிற்றிலக்கியங்களும் தனிப்பாடல்களும் உயிரினங்களை தம்மிடம் பாடற்சுவையூட்ட பாவலர்கள் பயன்படுத்தியுள்ளார்கள்.


  நளன், தமயந்தியைக் காட்டில் விட்டுச் செல்கின்றான். அதிகாலையும் புலர, கோழிகளும் இயல்பாக கூவுகின்றன. இதைப் பாடப்புகுந்த புகழேந்தி, தமயந்தியின் தாங்கொணாத் துயர் கண்டே, கோழிகள் சூரியனை விரைவாக வரக் கதறுவதாக தற்குறிப்பேற்ற அணியிலே கூறுகிறார்.


  “தையல் துயர்க்குத் தறியா தம் சிறகால்

  கையால் வயிறலைத்து காரிருள் வெய்யோனை

  வாவு பரித் தேரேறி வாவென்றழைப்பது போல்

  கூவினவே கோழிக் குலம்”


  மூவேந்தர் சேர,சோழ, பாண்டியனைப் பற்றி மூன்று தொள்ளாயிரம் பாடல்களைப் பாடியதாக முத்தொள்ளாயிரம் சொல்லப்படுகின்றது. இப்பாடல்கள் முழுவதும் வெண்பாக்களால் ஆனவை. அதில் ஒரு பாடல் 


  "அள்ளற் பழனத்து அரக்காம்பல் வாயவிழ

  வெள்ளந் தீப்பட்டதென வெரீஇப் புள்ளினந்தம்

  கைச்சிறகாற் பார்ப்பொடுக்கும் கௌவை உடைத்தரோ!

  நச்சிலைவேற் கோக்கோதை நாடு!" 


  சேர மன்னன் நாட்டிலே போரே ஏற்படுவதில்லை. ஒரு நாட்டுடன் போரிடும் வீரர்கள் அந்த நாட்டைக் கொளுத்தி அதாவது தற்போது அணுகுண்டு வீசி அழிப்பது போல் அந்நாட்டு ஊர்களை, வயல்களை அழித்து, மக்களிடம் அச்சத்தை ஏற்படுத்தி ஆரவாரம் செய்ய வைப்பார். ஆனால், சேர மன்னன் ஆளுகின்ற நாட்டிலே இவ்வாறான ஆரவாரம் ஏற்படுவதில்லை. அம்மன்னன் நச்சுத் தோய்த்த இலைப்பரப்பை உடைய வேலேந்தியவன். அதனால், அவனுக்குப் பயந்த எதிரிகள், கொள்ளையர்கள் அந்நாட்டில் இல்லை. அதனால், அச்சத்தால் எந்தவித ஆரவாரமும் இருந்ததில்லை. ஆனால், அங்குள்ள வயல்நீரிலும், அதன் கரைகளிலும் வாழுகின்ற பறவைகள் அந்த வயல்களிலே பூத்திரிக்கும் ஆம்பல் மலர்களைக் கண்டு வயலிலே தீப்பிடித்து விட்டது என்று பயந்து ஆரவாரத்துடன் அலைந்தனவாம். அதுமட்டுமல்ல இதனால், தம் குஞ்சுகளுக்கு பாதிப்பு ஏற்பட்டுவிடும் என்று அஞ்சி அவற்றைத் தம்முடைய கை போன்ற சிறகுகளால் அணைத்து மறைத்துக் கொள்ளுமாம். 


  மனித இனங்கள் மட்டுமல்ல பறவை விலங்குகள் கூட தம்முடைய பிள்ளைகளை பாதுகாத்து வளர்த்தெடுக்கின்றன. இங்கிலாந்தில் னழஎநச என்னும் இடத்தில் கட்டப்பட்ட ஒரு புதிய தொடர்வீட்டு மாடியிலே ஒரு பரடட என்னும் பறவை கூடுகட்டியிருந்தது. அந்த வீட்டை வாங்கிய மனிதர்களை வரவிடாமல் துரத்திக் கொத்தியபடி விரட்டியது. அங்குள்ள முட்டை குஞ்சி பொரித்து குஞ்சுப் பறவை பறந்த பின்தான் அங்கு செல்லக்கூடியதாக இருந்தது. 


  குரங்குக்கும் மனிதர்களுக்கும் இடையிலே பல ஒற்றுமைகள் இருக்கின்றன. குரங்கில் இருந்தே மனிதன் வந்தான் என்று பரிணாமக் கோட்பாடு கூறுகின்றது. வூப்பற்றால் நகரத்து மிருகக்காட்சிச்சாலையிலே ஒரு குரங்கு தான் இருக்கும் இடத்திற்கு ஒரு சாக்குத் துணியை எடுத்துக் கொண்டு போய் போட்டு அதன்மேலேதான் இருக்கும். குரங்கு தன் குட்டிக்கு பேன் பார்க்கும் காட்சியை நாம் இலங்கையில் அதிகமாகக் கண்டிருக்கின்றோம். இக்குரங்குகள் பற்றிய பல இலக்கியச் சுவை மிகுந்து பாடல்கள் எம்மால் அறியக்கிடக்கின்றன. 


  நற்றிணை 151 ஆவது பாடலிலே 
  மிளகுக் கொடி படர்ந்திருக்கும் மலையடுக்கத்தை, பெண் குரங்கும், ஆண்குரங்குக்கும் புணரும் இடமாக சங்க இலக்கியத்திலே காட்டப்பட்டுள்ளது. ஆண்குரங்கும் மந்தியும் களவியில் ஈடுபட்டுக் கொண்ட பின் குரங்குக் கூட்டங்கள் பார்த்து விடக்கூடாது என்பதற்காக, மரத்தின் மீது ஏறி அங்கே இருக்கும் ஆழமான சுனைநீரில் தன் உருவத்தைப் பார்த்துக் கலைந்து கிடக்கும் தன் தலை முடியைப் பெண்குரங்கு திருத்திக்கொள்ளுமாம். இக்காலப் பெண்கள் கண்ணாடி பார்க்கும் பழக்கத்தைப் போல் அக்காலப் பெண்குரங்குகள் சுனைநீரைக் கண்ணாடியாகப் பாவித்திருக்கின்றன.

   

  “கடுவன், முறியார் பெருங்கிளை அறிதல் அஞ்சிக்

  கறிவளர் அடுக்கத்து கள்வினிற் புணர்ந்த

  செம்முக மந்தி செல்குறி கருங்காற்

  பொன்னினர் வேங்கைப் பூஞ்சினைச் செலீஇயர்

  குண்டுநீர் நெடுஞ்சுனை நோக்கி கவிழ்ந்து தன்

  புன்தலைப் பாறு மயிர் திருத்தும்” 


  காதல் கணவன் இறந்தால் தற்கொலை செய்கின்ற மனிதர்களைக் காணுகின்றோம். ஆனால், தன் கணவன் இறந்த பின் குட்டிகளைத் தன்னுடைய சுற்றத்தாரிடம் ஒப்படைத்துவிட்டு மலையேறித் தற்கொலை செய்து கொண்ட ஒரு குரங்கு பற்றி குறுந்தொகை 66 ஆவது பாடலிலே காணுகின்றோம். 


  “கருங்கண் தாக்கலை பெரும்பிறிது உற்றெனக்

  கைம்மை உய்யாக் காமர் மந்தி,

  கல்லா வன்புறழ் கிளைமுதற் சேர்த்தி

  ஓங்குவரை அடுக்கத்து பாய்ந்து உயிர் செகுக்கும்”


  திருக்குற்றாலக்குறவஞ்சியிலே ஒரு பாடல் குரங்குகளின் காதலை எடுத்துக்காட்டுகின்றது. ஆண் குரங்குகள் பெண்குரங்குக்கு பழங்களைப் பறித்து வந்து கொடுத்துத் தழுவுகின்றன. இச்சமயத்திலே பெண்குரங்கு சில பழங்களை கீழே சிந்துகின்றன. அச்சிந்தும் கனிகளை தேவர்கள் கேட்பார்கள் வேடர்கள் தேவர்களை கண்களால் பார்ப்பார்கள். என்று இப்பாடல் செல்கின்றது. 


  “வானரங்கள் கனிகொடுத்து மந்தியொடு கொஞ்சும்

  மந்தி சிந்து கனிகளுக்கு வான் கவிகள் கெஞ்சும்

  கானவர்கள் விழியெறிந்து வானவரை அழைப்பர்

  தேனருவித் திரை எழும்பி வானின் வழி ஒழுகும்

  செங்கதிரோன் பரிக்காலும் தேர்க்காலும் வழுகும்

  கூனல் இளம்பிறை முடித்த வேணி அலங்காரர்

  குற்றாலத் திரிகூட மலை எங்கள் மலையே”


  இவ்வாறு மனிதர்களை விட பிற உயிரியங்கள் எவ்வாறு சிறப்புடையவை என்பதனை ஒளவையார் சோழ மன்னனிடம் பாடிய பாடல் மூலம் அறியக்கூடியதாக இருக்கின்றது. 


  “வான்குருவியின் கூடு வல்லரக்குத் தொல்கறையான்

  தேன்சிலம்பி யாவர்க்கும் செய்யரிதால் - யாம்பெரிதும்

  வல்லோமே என்று வலிமைசொல வேண்டாம் காண்

  எல்லார்க்கும் ஒவ்வொன்று எளிது.”


  குருவியின் கூடு, கறையான் புற்று, தேன்கூடு, சிலந்திவலை போன்றவை யாராலும் செய்ய முடியாது. அதேபோல் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சிறப்பு உண்டு. எனவே அறிவில் குறைந்தோர் என்று  எண்ணும் யாம் உயிரினங்களின் சிறப்புக்கள் பற்றி அறியப் புகுந்தால் எண்ணிலங்காத சான்றுகள் கடலிலும், வானிலும், தரையிலும் அறியக்கூடியதாக இருக்கின்றன.   உண்மை நட்பை இலக்கியங்களில் மட்டுமே காண முடியும்

  மனித வாழ்க்கையிலே உள்ள உறவுமுறைகளிலே நட்பு என்னும் உறவே மிதமாகப் பேசப்படுகின்றது. பெற்றோரிடம் மனைவியிடம் கூறத் தயங்கும் விடயங்களைத் துணிந்து...