புதன், 5 மார்ச், 2025
உலகம் அமைதி பெற
இன்றைய
உலகிலே முக்கியமாகப் பேசப்பட வேண்டிய ஒரு விடயம் உலக அமைதி. உலக அமைதி என்று சொல்லுகின்ற போது அது இடவாகு பெயராக
அமைந்திருக்கின்றது. உலக மக்களின் அமைதியைக் குறிக்கின்றது. அதற்குள்ளாகவே உலக
சமாதானமும் அடங்கி விடுகின்றது. உலகம் சமாதானமாக இருந்தாலேயே வாழுகின்ற ஒரு
வாழ்க்கையை நிம்மதியாக நிறைவு செய்வோம். நாம் அன்பாலே உலகு செய்யவில்லை, வன்பாலேயே உலகு செய்திருக்கின்றோம். அனைத்து உயிர்களையும் ஒன்றாக
நினைக்கும் பக்குவம் மனங்களுக்கிடையே ஏற்படாத காரணமே மனங்களைச் சிதைத்து உலகத்தின்
அமைதியைக் கெடுக்கின்றது.
உலக அமைதி முதலில் குடும்பத்தால் சீரழிகின்றது. குடும்பத்துக்குள் கணவன் மனைவியரிடையே கருத்து வேறுபாடுகளால் நடைபெறுவது குடும்பச் சண்டை. இதனால், மன அமைதி குன்றுகின்றது. சகோதரர்களிடையே பணவிடயங்கள் உரிமைப் போராட்டங்கள் ஏற்படுகின்றன. இதனால், பாரத யுத்தமே கண்டது எம்முடைய தமிழ்நாடு. இதனைவிட குடும்ப அமைதியின்மை மனிதர்களிடம் மனஅழுத்தத்தை ஏற்படுத்துகின்றது. அதன் மூலமாக பலவிதமான பிரச்சினைகளை குடும்பம் எதிர்நோக்க வேண்டி வருவதுடன் தொடர் கொலைகள் நடைபெறுவதற்குக் காரணமாக அமைகின்றன என்று மனநலவியலாளர்கள் ஆய்வுகள் மூலம் எடுத்துரைக்கின்றார்கள்.
பேராசையும் எமக்கு உரிமையில்லாதவற்றில் நாம் ஆசைப்படுதலும் குடும்பம் அமைதி இழந்து உலக அமைதியைக் கெடுக்கின்றன. இதனால், இராவண வதை, வாலி வதை போன்ற யுத்தங்கள் கண்டது தமிழ்நாடு. இவ்வாறான காரணங்களினால், குடும்ப அமைதி குன்றி அது அடுத்த கட்டமாக நாட்டின் அமைதியின்மையாகவும் உலக அமைதியின்மையாகவும் மாற்றம் பெறுகின்றது.
எந்த
ஒரு விடயமும் முதலில் வீட்டில் இருந்து நாட்டுக்குப் பரவிப் பின் நாட்டில் இருந்து
உலகத்துக்கு பரவுகின்றது. நாடும் வீடும் உலகமும் விளங்க வேண்டுமென்றால், முதலில் வீட்டுக்குள் அமைதி
கிடைக்க வேண்டும். அதற்குரிய வழிகளை ஒவ்வொரு வீட்டு அங்கத்தவர்களும் நாம்
பேண வேண்டியது அவசியம்.
ஐரோப்பிய
நாடுகளில் இருக்கின்ற நாம் இன்று மனப் பதட்டத்துடன் இருக்கின்றோம். ஒரு உள்நாட்டு
யுத்தத்திலிருந்து தப்பி உயிர் பிழைத்து அதன் வடு இன்னும் மாறுவதற்கு முன்னே
மீண்டும் ஒரு உலக யுத்தத்தைச் சந்திக்கப் போகின்றோமோ என்ற அச்சம் எங்களுடைய
மனத்திலே நிறைந்திருக்கின்றது. உக்ரைனுக்கும் ரஷ்யாவுக்கும் இடையிலே நடக்கின்ற
யுத்தத்தை நோக்கி எம்முடைய கவனம் ஒவ்வொரு நாளும் இருக்கின்றது. ஐரோப்பியர்களின்
தலையீட்டால் நாம் வாழுகின்ற ஐரோப்பிய நாடுகள் அணுகுண்டுத் தாக்குதலுக்குள்
அகப்பட்டு விடுமோ என்ற அச்சம் இங்கு வாழுகின்ற அனைவரின் மனங்களிலும் இருக்கின்றது.
நிலவுலகுக்கோர்
ஆட்சிக்கான காலம் கடந்து விட்டது. இதை நாம் நினைத்தாலும் நடத்த முடியாத நிலையிலே
உலகம் நிற்கின்றது. எப்போது நிலப்பகுதிகளை குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல் பாலை
என்று ஐவகை நிலங்களாகப் பிரிக்கப்பட்டதோ அவ்வாறு அவ்வவ் நிலங்களுக்கு மக்கள்
குடிபெயர்ந்தார்களோ வாழ்ந்தார்களோ அன்றிலிருந்தே உலகம் பிரிக்கப்பட்டு விட்டது.
தனக்கென ஒரு ஆட்சி, தனக்கென ஒரு சட்டம், கல்வி முறை, என நாடுகள் ரீதியாகப்
பிரிக்கப்பட்டுவிட்டன. மொழி, இன, மத
ரீதியாக மனிதன் பிரிக்கப்பட்டுவிட்டான். ஒன்றை ஒன்று வெல்ல போரிட வேண்டிய
சூழ்நிலையை உருவாக்கி விட்டான்.
மாநிலங்கா
வலனாவான்
மன்னுயிர்காக் குங்காலைத்
தானதனுக்
கிடையூறு
தன்னால்தன் பரிசனத்தால்
ஊனமிகு
பகைத்திறத்தால்
கள்வரால் உயிர்தம்மால்
ஆனபயம்
ஐந்துந்தீர்த்
தறங்காப்பா னல்லனோ
ஈன்று
புறந்தருதல் என்தலைக் கடனே
சான்றோன்
ஆக்குதல் தந்தைக்குக் கடனே
வேல்வடித்துக்
கொடுத்தல் கொல்லற்குக் கடனே
நன்னடை
நல்கல் வேந்தற்குக் கடனே
ஒளிறுவாள்
அருஞ்சமம் முருக்கிக்
களிறு
எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே
பாரி என்னும் குறுநில மன்னனை அழிப்பதற்கு சேர சோழ பாண்டிய மூவேந்தரும் ஒன்றாக இணைந்து அழித்தார்கள். தம்மை விஞ்சி பாரி என்னும் குறுநில மன்னன் உயர்ந்து நிற்பான் என்று அஞ்சினார்கள். உலகத்துக்கு நல்லவனாக வாழக்கூட மனித இனம் இடம்தராது என்னும் கசப்பான உண்மையையும் நாம் இவ்விடத்தில் நினைத்துப் பார்க்க வேண்டியுள்ளது.போரினால் வருகின்ற அழிவு துன்பங்களில் இருந்து நாடு அமைதியடைய வேண்டும் என்று மன்னர்கள் எண்ணினார்கள். அதற்குரிய முயற்சிகளும் மேற்கொண்டிருந்தார்கள். தொண்டைமான் என்னும் மன்னன் தன்னுடைய படைக்கலங்களின் வலிமையைப் பற்றிப் பெரிதாக எண்ணியதால் அறியாமையில் அதியமானுடன் போரிட எண்ணினான். அதனால், அதியமான் அப்போரை தடுத்து நிறுத்துவதற்காக ஒளவையாரை தொண்டைமானிடம் தூது அனுப்பினார். அங்கு படைக்கலங்களை தொண்டைமான் ஒளவையாருக்குக் காட்டினார். ஒளவையாரும்
கண்டிர
ணோன்காழ் திருத்திநெய் யணிந்து
கடியுடை
வியனக ரவ்வே யவ்வே
பகைவர்க்
குத்திக் கோடுநுதி சிதைந்து
கொற்றுறைக்
குற்றில மாதோ வென்றும்
உண்டாயிற்
பதங்கொடுத்
தில்லாயி
னுடனுண்ணும்
இல்லோ
ரொக்கற் றலைவன்
அண்ணலெங்
கோமான் வைந்நுதி வேலே.
போரில்லா
நல்லுலகம் வர வேண்டும் என்பதற்காக உலக சமாதான இயக்கத்தை 10 ஆம் திகதி ஆவணி மாதம் 2002 முதல் 13.8.2002 வரை ஆழியாரில் உலக அமைதி மாநாட்டை வேதாத்திரி மகரிஷி அவர்கள்
நடத்தினார். அந்த மாநாட்டிலே
ஐக்கியநாடுகள் தகவல் மைய இயக்குனர் திரு பீட்டர் ஸ்ரார்ஸ்ரெபிக் அவர்கள் நேரிலே
வந்து உலக சமாதான திட்டம் பற்றிய மகரிஷியின் தீர்மானத்தைப் பெற்றுக் கொண்டார்.
அந்த உலக சமாதானத் திட்டங்களைத் தற்போது யுனெஸ்கோ நிறுவனத்தின் ஆலோசனைக்குழுவின்
அமைப்பிலே சேர்த்திருக்கிறார்கள்.
நோய்
உள்ளவர்களுக்குத்தானே மருந்து கொடுக்க வேண்டும். அதுபோல குறைகள் நிறைந்த
உலகத்துக்குத்தான் அறிவுரைகள் தேவை. திருவள்ளுவர் 1330 குறள்களில் உலகம் உய்வதற்காகப் பல அறிவுரைகள் கூறினார். அறிவுடமை என்பது
பிறர் உயிர்களுக்கு நீ செய்யும் உதவிதான்
அறிவு என்று எடுத்துரைத்தார். கொல்லாமை போதிக்கப்பட்டது. நீதி நூல்கள், ஆசாரக்கோவை போன்ற நூல்கள் அறிவுரை கூறி மக்களை நல்வழிப்படுத்தும் நூல்கள்
எழுந்தன. வள்ளலார் தோன்றினார் வாடிய பயிர்களைக் கண்ட போதெல்லாம் வாடினார்.
எத்துணையும் பேதமுறாது எவ்வுயிரும் தம்முயிர் போல் பார்க்கச் சொன்னார். ஆனால்,
இன்று உலகநாடுகளில் என்ன நடக்கின்றது?
கடலும்
மலையும் எங்கள் கூட்டம்;
நோக்குந்
திசையெலாம் நாமன்றி வேறில்லை;
நோக்க
நோக்கக் களியாட்டம்.
துன்னற்க
தீவினை பால்' என்றார்
கனவு
காணுங்கள் - அந்தக் கனவுகளை
எண்ணங்களாக
மாற்றுங்கள்.
எண்ணங்களை
செயல்படுத்துங்கள் என்றார் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள்
ஜெர்மனி
13.08.2023
திங்கள், 3 மார்ச், 2025
வாசி.. நேசி.. யோசி..
![]() |
எனக்கு என்ன நடக்கின்றது என்பது
எனக்கே தெரியாது. என்னைச் சுற்றிப் புத்தகங்கள் பறப்பது போலவும், என்னை நோக்கி
வருவது போலவும் உணர்கிறேன். எங்கே போனாலும் என் அருகே ஒரு புத்தகக் கட்டு இருக்க
வேண்டும் என்று விரும்புகிறேன். கூடிக் கும்மாளம் இடுகின்ற மனிதர்களிடம் ஏதாவது
நல்ல புதுமை இருக்கிறதா என்பதை தேடுகிறேன். நான் மட்டும் ஏன் இப்படி இருக்கின்றேன்?
என்பது என்னுடைய அம்மாவின் கேள்வி. சுற்றிச்சுற்றி வருகின்ற அத்தனை கடதாசியும்
எனக்குப் பல செய்திகளை கொண்டு வந்து சேர்ப்பது போல எனக்குப்படுகிறது. அருகே வருகின்ற ஒரு கடதாசியை எடுத்துப்
பார்க்கின்றேன். அதில் ஆழமான அறிவியல் கருத்து ஒன்று இருக்கிறது. பேனாக்கள் மைகளை
நிரப்பிய வண்ணமே இருக்கின்றன. கடதாசிகள் எழுத்துக்களை நிரப்பிய வண்ணமே
இருக்கின்றன. புதிய புதிய கருத்துக்கள் என்று நான் தேடுபவை அத்தனையும் ஏற்கனவே
வந்த கருத்துக்கள் போல எனக்கு தென்படுகின்றன. நான் ஏன் இப்படி இருக்கின்றேன்?
எனக்குள்ளே நானும் பல தடவை கேட்டுக் கேட்டுப் பார்த்தாயிற்று. கண்களுக்கு
மையிடுகின்ற காலத்தில் கண்களுக்கு எழுத்துக்களைத் துளிகளாக விடுகின்றேன்.
இரவு ஒரு மணி அம்மா கண்ணை விழித்து பார்க்கிறாள். படுக்கையறையில் வெளிச்சம். “இந்த லைட்டை ஆஃப் பண்ணாம படுத்திருக்கிறாள். எத்தனை தடவை சொன்னாலும் இவளுக்கு விளங்குவதாயில்லை” என்று கூறியபடி அம்மா என்னுடைய அறைக்குள் வந்தாள். நான் தூங்கவில்லை கையிலே புத்தகத்தை மிக ஆர்வமாக வாசித்துக் கொண்டிருந்தேன்.
“இன்னும் நீ படிக்கலையா? இப்படி
நித்திரை முழிச்சு முழிச்சுப் படிச்சு படிச்சு M.A பரீட்சை பாஸ் ஆகியிருந்தாலும்
பரவாயில்லை. என்ன செய்யப் போற. மற்ற பிள்ளைகளைப் பார். அது அது பாட்டு, டான்ஸ்
என்று சுத்தித் தெரியுதுகள். நீ மட்டும் எந்த நேரமும் ஒரு மூலையில் இருந்தபடி
புத்தகத்தோடு வாசிப்பு. வாசிப்பு.. வாசிப்பு"
என்று முணுமுணுத்தபடி அம்மா என்னுடைய
புத்தகத்தைப் பறித்தாள்.
"விடுங்கள் அம்மா"
"இப்ப எத்தனை மணி புள்ள. நாளைக்கு வேலை இருக்குதல்லோ. அட இன்னும் இந்தப் புத்தகத்தைத் தானா கையில வைத்திருக்கிறாய்?
“அம்மா போன போக்கில் பார்த்துட்டுப்
போறதுக்கு இது என்ன கதைப் புத்தகமா? நல்லா ஆழமா இரண்டு மூன்று தடவை வாசித்தால்
மட்டும் தான் மூளையில் இருக்கும். இது ஆய்வு சம்பந்தமான புத்தகம்.”
“மூளையில் பதித்து என்ன செய்யப்
போகிறாய்? நாலு பேருக்கு நீ சொன்னால் யார்
கேட்கப் போகிறார்கள். அவரவர்கு அவரவர் வேலை.”
“யாருக்கும் சொல்வதற்கு நான்
படிக்கவில்லை நான் தெரிந்து கொள்வதற்குப் படிக்கிறேன் அம்மா”
“அதுதான் தெரிந்து வைத்து என்ன செய்யப் போகிறாய்?
“உங்களுக்கு அதெல்லாம் விளங்காது”
“சரி.. சரி என்னென்றாலும் செய்" என்று கூறியபடி
மீண்டும் வந்து படுக்கையில் படுத்து விட்டாள்.
“இவள் ஏன் இப்படி இருக்கிறாள்.
புத்தகத்தை தூக்கிக்கொண்டு புத்தகப் புழுவாக இருக்கிறாளே. இவளுடைய வயது பிள்ளைகள்
எப்படி எல்லாம் தங்களுடைய பொழுதைக் கழிக்கின்றார்கள். கண்டதையும் படித்துப்
படித்து அறிவு தான் வீங்கிப் போய்க்
கிடக்கிறது.
என்ர பிள்ளை அறிவாளி என்று சொன்னால் யார் கேட்கப் போகிறார்கள். பரிட்சையில் பாஸ் பண்ணி சான்றிதழ் எடுத்தால் மட்டும் தான் அவர்கள் அறிவாளி என்று நினைக்கிற சமுதாயம் ஆயிற்று. இவளுக்கு ஏன் இது இன்னும் விளங்குதில்லை என்று சத்தமாகத் தனக்குத் தானே பேசியபடி அம்மா படுக்கையில் விழுந்தாள்.
இப்போது என் கையில் இருப்பது காலம்
என்னும் ஸ்டீபன் ஹாக்கிங் புத்தகம். ஒவ்வொரு பக்கங்களையும் மிக ஆழமாக
இருட்டிலும் புத்தகத்தில் லைட்
பூட்டி வாசிக்கின்றேன்.
அடுத்தவர்களுக்குச் சான்றிதழ் காட்ட
வேண்டுமென்ற அவசியம் எனக்கு இல்லை.
அன்றும் அப்படித்தான் வீட்டிலிருந்து கணினியில் வேலை பார்ப்பதனால் 5:00 மணிக்கு வேலை முடிந்தபின் கையிலே புத்தகத்தைத்
தூக்கிக்கொண்டு வாசிகசாலையில் இருந்து அமைதியாக புத்தகம் வாசிப்பதற்கு வீட்டை
விட்டுக் கிளம்பினேன்.
கதவைத் திறந்து காற்று போல் வீதிக்கு வந்தேன். வெளியே வந்த என்னை, சித்தி சிவாஜினி அழுத கண்ணீருடன் எதிர் கொண்டாள். என்னைக் கண்டதும் அவளுடைய அழுகை ஆர்ப்பாட்டமாகியது.
"ஏன் சித்தி அழுகின்றீர்கள்" என்று அவளை அணைத்துக்கொண்டு கேட்டேன். நான் கேட்டபோது அவளுடைய அழுகை மேலும் அதிகரிக்கின்றது. அவளை அழைத்துக் கொண்டு வீட்டுக்குள் உள்ளே வருகின்றேன். தன்னுடைய தங்கையினுடைய நிலைமையைக் கண்ட அம்மா "என்ன நடந்தது என்ன நடந்தது" என்று ஆர்ப்பரிக்கத் தொடங்கி விட்டாள்.
"அம்மா சித்திக்கு குடிக்கிறதுக்கு ஏதாவது கொண்டு வாங்க"
என்று கூறி அம்மாவை அனுப்பிவிட்டு சித்தியின் அருகே அமருகின்றேன்.
"சித்தி! முதலில் கண்ணை துடையுங்கள். அழுகையை நிப்பாட்டுங்கள்.
நீங்கள் என்ன விடயம் என்று சொன்னால் தான் எதையும் நாங்கள் செய்ய முடியும். இந்த
உலகத்தில் முடியாதது என்று எதுவுமே இல்லை. நாம் முயற்சி செய்து பார்க்கின்ற போது தான் எந்தப் பாரிய
விடயத்தையும் சரி செய்ய முடியும். நீங்கள் சொல்லுங்கள் என்னால் முடிந்த
எல்லாவற்றையும் உங்களுக்கு நான் செய்வேன்" என்று நான் கூறினேன்.
"கிருத்திகா! உனக்குத் தெரியும் தானே உன்னுடைய தங்கச்சி பிரியா கொஞ்ச நாளாக சுகவீனமாய் இருக்கின்றாள் என்ற விஷயம்"
"ஓம் அதுக்கென்ன சித்தி மருந்து எடுக்குறா தானே. காலையில் டாக்டர்கிட்ட போறதென்று சொன்னீங்களே! அதுக்கு என்ன சித்தி இப்ப?
"டாக்டர் கைய விரிச்சிட்டார் மகள். இது என்ன வருத்தம் என்று அவர்களால் கண்டுபிடிக்க முடியவில்லையாம்" என்று தொடர்ந்து கண்ணீர் விடத் தொடங்கினாள். தாய் பிள்ளை பாசம் என்பது விபரிக்க முடியாதது. இதற்கு விலங்கு, பறவை, பூச்சி, புழுக்கள் எதுவுமே விதிவிலக்கல்ல.
தேநீரைக் கொண்டு வந்து கொடுத்த அம்மாவும் சித்தியுடன் இணைந்து விட்டார்.
"கொஞ்சம் ரெண்டு பேரும் நிறுத்துறீங்களா? சித்தி அழுகையை நிறுத்துங்கள் . ரீயைக் குடியுங்கள். வாங்க முதல் வீட்டை போவோம். எனக்கு பிரியாவின் மருந்துகள், டாக்டர் தந்த Prescription விபரங்கள், எல்லா விஷயங்களையும் எடுத்து என்னிடம் தாருங்கள்" என்றேன்.
தேநீரை அவசரமாக அருந்திவிட்டு என் பின்னே தொடர்ந்தாள் சித்தி. கையிலே மடிக்கணினியை எடுத்துக்கொண்டு விரைவாக வாகனத்தைச் சென்றடைந்தேன். சித்தியின் வலியை என்னால் புரிந்து கொள்ள முடிகிறது. என் இதயத்துக்குள் படபட என்று அடித்துக் கொள்கிறது. ஆனால் அதை நான் வெளியில் காட்டவே இல்லை. என்ன செய்யலாம் என்ற சிந்தனை மட்டும் எனக்குள் ஓடியது.
வாகனத்திலிருந்து சித்தியை இறக்கி சித்தியின் வீட்டுக்குள் நுழைந்த போது பிரியா கன்னங்கள் ஒட்டியவளாய் குழி விழுந்த கண்களுடன் மெலிந்த தேகத்துடன் கட்டிலில் படுத்திருப்பது தெரிந்தது. அவர்களுடைய வரவேற்பு அறைக் கதிரை கட்டிலாக மாறி இருந்தது. வழமையாக என்னை ஓடிவந்து கட்டியணைத்து "அக்கா..." என்று ஆசையோடு அழைக்கின்ற பிரியா கிழித்துப் போட்ட காகிதம் போல மெத்தையிலே கிடந்தாள். அவளருகே சென்று அவளுடைய தலையைத் தடவியபடி "நான் பார்த்துக் கொள்கிறேன் பிரியா" என்று அன்பாக அவளுக்கு ஒரு நம்பிக்கையை கொடுத்தேன். அறைக்குள் ஓடி சென்ற சித்தி கையில் சில பத்திரங்களையும், மாத்திரைகளையும் எடுத்துக்கொண்டு என்னருகே வந்தாள்.
மடிக்கணினியை திறந்தேன். ChatGpt
க்கு மாத்திரைகள், மருத்துவரின்
குறிப்புக்கள், பிரியாவின்
உடல் நிலை, பற்றிய சகல விடயங்களையும் விபரமாக எழுதினேன். எழுதி அடுத்த
நிமிடத்தில் படபட என்று பல குறிப்புகளும் செய்ய வேண்டிய முறைகளையும்
மருந்துகளையும் ChatGpt எழுதிக்
கொடுத்தது. அவை எல்லாவற்றையும் எடுத்துக் கொண்டு அவசரமாக சித்தியை அழைத்துக்
கொண்டு மருத்துவமனைக்குச் சென்றேன். அவசரமாக மருத்துவரை பார்க்க வேண்டும் என்று
தகவல் கொடுத்தேன். காத்திருக்கும் படி முன் பக்கம் இருந்த பணியாளன் கூறினான்.
பிரியாவினுடைய அம்மாவைப் பார்த்து “கிருத்திகா உங்களுக்குச் செய்திருப்பது சாதாரணமான விடயம் இல்லை. நாங்களே நினைத்துப் பார்க்காத ஒரு மருந்து மருத்துவத்தை எங்களுக்கு கிருத்திகா கொண்டு வந்து தந்திருக்கின்றாள். அவள் காட்டிய இந்த வழியிலே சாதகம் இருக்கின்றதா? பாதகம் இருக்கின்றதா என்பதை மருந்துகளை நான் கவனித்த போதும், பயிற்சிகளை நான் உற்று நோக்கிய போதும் உணர்ந்து கொண்டேன். எத்தனை படித்து பட்டம் பெற்றாலும் சொந்த அறிவு என்ற ஒன்று இருக்க வேண்டும். சந்தர்ப்பத்துக்கு ஏற்றது போல் மூளையைப் பயன்படுத்துகின்ற உத்தி தெரிந்திருக்க வேண்டும். அது எங்களால் முடியவில்லை கிருத்திகாவுக்கு முடிந்திருக்கின்றது. இந்த செயற்கை நுண்ணறிவு சில விடயங்களில் தப்பிதமாக இருந்தாலும் சில விடயங்களில் உயிருக்குக் கை கொடுக்கின்றது என்பதை இதன் மூலம் அறிந்து கொண்டேன். வெல்டன் கிருத்திகா என்று என்னைப் பாராட்டிய டாக்டர் பிரெண்டா, என்னையும் சித்தியையும் வீட்டுக்கு அனுப்பிவிட்டு பிரியாவினுடைய சிகிச்சைக்கு ஆயத்தங்கள் செய்வதற்காக எழுந்து சென்றாள்.
வெளியே வந்த சித்தி என்னைக் கட்டி அணைத்து முத்தம் கொடுத்து நன்றி பாராட்டினாள். உன்னுடைய அம்மா கொடுத்து வைத்தவள். உன்னைப் போல ஒரு பிள்ளை பெற்றெடுப்பதற்குப் பாக்கியம் பெற்றவள். என்னதான் படித்துப் பட்டம் எடுத்தாலும், அடுத்தவர்களுக்காகத் தம்மை இழந்து உதவுகின்ற பக்குவமே மனிதர்களுக்குத் தேவை. அந்த விஷயத்தில் நீ கடவுள் மகள்” என்று கூறினாள்.
“சித்தி அன்புதான் இறக்கை போல உலகத்தைப் பாதுகாக்கும். அது காற்றைவிட அடுத்தவர்களில் வேகமாகப் பரவக்கூடியது’ என்று கூறிய வண்ணம் இருவருமாக வீட்டிற்கு சென்றோம். வாசலுக்கு ஓடி வந்த அம்மாவிடம் சித்தியே முழு விடயங்களையும் மகிழ்ச்சி ததும்பக் கூறினாள். ஆச்சரியத்துடன் என்னைப் பார்த்த அம்மா மெல்லிய புன்சிரிப்புடன் “கெட்டிக்காரி” என்றாள்.
என்னுடைய வாசிகசாலைத் திட்டம் இன்று நிறைவேறாத காரணத்தாலே கட்டிலில் அமர்ந்து தலையணையை மடியிலே வைத்து அதன்மேல் IPAD ஐத் திறந்தேன். Moon Reader Pro வில் நான் சேகரித்து வைத்திருந்த புத்தகங்களில் கலீல் ஜிப்ரான் அவர்களின் தீர்க்கதரிசி என்னும் புத்தகத்தில் எழுதப்பட்டிருந்த வரிகள் முன்னே தென்பட்டன.
“நீங்கள் அன்பு கொண்டால் கடவுள் எம் உள்ளத்தில் இருக்கிறார் என்று கூறாதீர்கள். மாறாக இறைவன் உள்ளத்தில் நாங்கள் உள்ளோம் என்று கூறுங்கள். அன்பின் பாதையை வகுக்க நீங்கள் முயல வேண்டாம். உங்களை ஒரு பொருட்டாக அவ் அன்பு கருதுமானால் அதுவே உங்கள் பாதையை வகுக்க வழி காட்டும்.
வரிகளை எனக்குள் வசமாக்க அம்மா கதவைத் திறந்தாள்.
“உன்னோடு ஒரு நிமிடம் பேசலாமா?
“அம்மா.. இது என்ன புதிதாக இருக்கிறது என்று எழுந்து அம்மாவை இறுகக் கட்டியணைத்தேன்.
“உனக்காக நான் திருமணத்துக்கு பையனை பார்க்க போவதில்லை. உனக்கு பிடித்தவனை உனக்குப் பிடித்தால் நீ திருமணம் செய்து கொள். இல்லையென்றால், அவனோடு வாழ்ந்து உனக்குத் திருமணம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் வருகின்றபோது திருமணம் செய். வாழ்க்கை என்பது வாழ்வதற்குத்தான் அது அவரவர்க்கு எப்படி வாய்க்கின்றதோ அதன்படி வாழ வேண்டியதுதான். இது எங்கள் சமுதாயத்திற்கு பிடிக்காததாக இருந்தாலும், நாம் வாழுகின்ற சிறிது காலப்பகுதிக்குள் என்ன பெரிய சாதிக்க போகின்றோம். மற்றவர்கள் கூறுகின்ற வார்த்தைகளை என் காதுக்குள் போட்டு அதன் வலியை மனத்துக்குள் கொண்டு வந்து, நான் வாழுகின்ற இந்த கொஞ்சக் காலத்துக்குள் என் வாழ்க்கையை நான் அழிக்க விரும்பவில்லை. மகிழ்ச்சி என்பது அவரவர் மனநிலையைப் பொறுத்தது. அவர்களுடைய சுதந்திரத்திற்குள் நாங்கள் புகுந்த விளையாடக் கூடாது. திருமணம் என்பது ஜெனடிக் ஒப்பந்தம். இரண்டு பாலினருடைய மரபணுக்கள் கலந்து ஒரு ஆரோக்கியமான அடுத்த தலைமுறையை உருவாக்க சமுதாயம் ஏற்படுத்திய சடங்கு. ஆரோக்கியமான தலைமுறை உருவாக ஆரோக்கியமான இருவர் இணைய வேண்டும். அதை நான் உனக்குச் சொல்லித் தரத் தேவை இல்லை” என்று சொல்லி படி எழுந்தாள்.
அம்மாக்கு என்ன நடந்தது? ஸ்தம்பித்து
நின்றேன்.
24.02.2025
-
“ அறிவை விரிவு செய்! அகண்டமாக்கு விசாலப் பார்வையால் விழுங்கு மக்களை அணைந்து கொள்! உன்னைச் சங்கமமாக்கு மானிட சமுத்திரம் நானென்ற...
-
திரு! திருந்தாத ஜென்மம் என்பது பல சமூகநலவாதிகள் முடிவு. ஆனால், திருவே என் பாசவிளக்கு பண்புள்ள மகன். என் காலடி மண்ணில் ப...
-
என் மகளின் பதினெட்டாவது வயது பிறந்ததின விழாவிலே என்னால் வாசிக்கப்பட்ட கவிதை. வானுயர் என் விளக்கு நீ என் வயிற்றி...